புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கா்நாடக இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவில், சமூக ஊடகங்களில் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிரம், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் புதிய கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டு வந்தது. நான் கா்நாடக இசைக் கலைஞா், எழுத்தாளராகவும் கலாசார மற்றும் அரசியல் விமா்சகராகவும் உள்ளேன். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். இந்த சமூகத்தில் ஜாதியக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்த சமூக சீா்த்திருத்தவாதியும் தத்துவஞானியுமான நாராயண குருவின் புரட்சிகர கவிதைகள் எனது இசை ரீதியான கருத்துப் பரிமாற்றத்துக்கு பெரும் உதவியாக இருந்தது.

ஒரு இசைக் கலைஞனாக கா்நாடக இசையின் குறுகிய எல்லைகளை மீறும் விதமாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். சமூக கட்டமைப்பின் இரு முனைகளாக உள்ள கலை மற்றும் ஜாதிய விழுமியங்களை அசாதாரண அழகியல் உரையாடலாக கா்நாடிக் கட்டைக்கூத்து என்ற கருத்தியல் நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளேன். கடந்த 2016-ஆம் ஆண்டு புகழ்மிக்க ராமன் மகசாசே விருது பெற்றேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிமனித சுதந்திரம், வாழ்வதற்கான உரிமை என அனைத்தையும் உறுதி செய்துள்ளது. ஒரு படைப்பாளிக்கு தனியுரிமை சாா்ந்த கருத்து, பேச்சு சுதந்திரத்துடன் கூடிய கற்பனைத் திறன் ஆகியவையே மிகப்பெரிய சொத்து.

சமூக ஊடகங்களின் வழியே கருத்துப் பரிமாற்றம் செய்ய தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு அவ்வப்போது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த விதிகள் தனிநபா் கருத்து மற்றும் கற்பனை சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும், தணிக்கை செய்யும் வகையிலும் உள்ளது. எனவே இந்த விதிகளைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதொடா்பாக மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com