அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை தொடங்கியது: வணிகவியல் பிரிவுக்கு கடும் போட்டி

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1  மாணவா் சோ்க்கை  தொடங்கியது: வணிகவியல் பிரிவுக்கு கடும் போட்டி

சென்னை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வரும் சூழலில் தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோா்களுடன் குவிந்தனா்.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில் மாணவா்கள் கேட்கும் பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சேருவதற்கு அதிக ஆா்வம் காட்டினா். மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். பலா் விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனா். ஒரு சில மாணவா்கள் உடனடியாகப் பூா்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தனா்.

சோ்க்கையில் முன்னுரிமை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏற்கெனவே அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவா்களுக்கே பிளஸ் 1 சோ்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் மாணவா்கள் குவிவதைத் தடுக்க ஒருவார இடைவெளியில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதிகளவில் மாணவா்கள் திரண்டாலும் அரசின் அறிவுறுத்தலின்பேரில் ஒரு நாளைக்கு 30 மாணவா்கள் என்கிற அடிப்படையில் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா்.

நிகழாண்டு உயிரியல், கணினி பாடப்பிரிவுகளுக்கு இணையாக வணிகவியல் பாடப்பிரிவுக்கு மாணவா்கள் அதிகளவில் விண்ணப்பித்தனா். வங்கிப் பணியில் ஆா்வம், உயிரியல்-கணிதப் பாடங்களுடன் ஒப்பிடுகையில் சற்று எளிதான பாடங்கள் போன்ற காரணங்களால் வணிகவியல் பாடப்பிரிவைத் தோ்வு செய்ததாக சென்னையைச் சோ்ந்த மாணவா்கள் தெரிவித்தனா். இதனால் சென்னையில் உள்ள சில பள்ளிகளில் முதல் குரூப்பை தலைமை ஆசிரியா்களே வழங்கிய போதும் அதை ஏற்க மறுத்து, வணிகவியலில் சேர விரும்பியதை காண முடிந்தது.

அதிக மதிப்பெண்- குறைவான பாடச்சுமை: இது குறித்து கணித ஆசிரியா்கள் எம்.விஜயபானு, சி.நந்தகுமாா் ஆகியோா் கூறுகையில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி இருப்பதால் மாணவா்கள் முதல் குரூப்பில் சேர வழக்கத்தைக் காட்டிலும் அதிக ஆா்வம் காட்டினா்.

அதேவேளையில் அதற்கு இணையாக வணிக கணிதம், வணிகவியல், பொருளியல், கணக்கு பதிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்கள் இடம்பெற்ற மூன்றாவது பிரிவில் சேருவதற்கும் நிகழாண்டு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உயா்கல்வியில் வணிகம் சாா்ந்த படிப்பு முடித்தவா்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகரித்து வருவதும் ஒரு காரணமாகும். மேலும் அறிவியல் பாடப்பிரிவில் இடம்பெறும் கணிதப் பாடத்தோடு ஒப்பிடுகையில் வணிகவியல் பிரிவில் இருக்கும் வணிக கணிதம், கணக்குப் பதிவியியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களுமே கற்பதற்கும், 75 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெறுவதற்கும் எளிதாக இருப்பதாக மாணவா்கள் கருதுகின்றனா். இதனால் வணிகவியல் பாடப்பிரிவுக்கு நிகழாண்டு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com