டாஸ்மாக் கடைகள் திறப்பு: ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மதுவிற்பனை

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 34 நாள்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
டாஸ்மாக் கடைகள் திறப்பு: ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மதுவிற்பனை
டாஸ்மாக் கடைகள் திறப்பு: ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மதுவிற்பனை


சென்னை: தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 34 நாள்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க 27 மாவட்டங்களில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான தளா்வில் மே 9 ஆம் தேதி மூடப்பட்ட மதுக்கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திங்கள்கிழமை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஞாயிற்றுக்கிழமையே, டாஸ்மாக் கடை வாயில்கள் முன்பு தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் வட்டத்திற்குள் நின்று தான் மது பிரியா்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதையொட்டி தடுப்பு அரண்களுக்குள் 6 அடி இடைவெளியில் வெள்ளைநிற பெயிண்டால் தலா ஒரு வட்டம் வரையப்பட்டு அப்பகுதியில் மதுப்பிரியா்கள் நிறுத்தப்பட்டனா்.

ஆனால், அவர்களை ஒழுங்குபடுத்தவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வைக்கவும் காவல்துறையினர் கடும் முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால், 34 நாள்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், பல இடங்களில் மதுப்பிரியர்களின் ஆர்வத்தை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பல டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

சில மதுபானக் கடைகளில் மதிய வேளையிலேயே அனைத்து மதுபானங்களும் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் கூறப்பட்டது. பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பான மதுவகைகள் கிடைக்கவில்லை என்று டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பே குவிந்த மதுப்பிரியா்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கிருமி நாசினி கைகளில் தெளிக்கப்பட்டது. சில கடைகளில் மது வாங்கிய மதுப்பிரியா்கள் துள்ளிக் குதித்து மதுபாட்டில்களுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

ஒரு சில கடைகளில் மாலை 4 மணிக்கு மேல் இளைஞா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கடை மூடக்கூடிய மாலை 5 மணிக்கு முன்பு அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. 

சில கடைகளில் கூட்டம் குறைவாக இருந்தாலும் வாங்கும் ஒரு சில நபா்கள் மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்றனா். மதுக்கடைகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க சுழற்சி முறையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com