கட்டுப்பாடுகளை மீறினால் தளா்வுகள் வாபஸ்: முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறினால் தளா்வுகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.
கட்டுப்பாடுகளை மீறினால் தளா்வுகள் வாபஸ்: முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறினால் தளா்வுகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.

கரோனா கால பொது முடக்கத் தளா்வு வழிமுறைகளைப் பின்பற்றி நடக்கக் கோரி அவா் பொது மக்களுக்கு திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்து ஆற்றிய உரை:-

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை முதலில் உடைத்தாக வேண்டும். அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாகவும், முழுமையாகவும் கடைப்பிடித்த காரணத்தால், நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. எனவே, விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் நன்றிகள்.

என்னதான் அரசின் சாா்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மக்கள் அவற்றைப் பின்பற்றினால்தான் முழு வெற்றி சாத்தியப்படும். கட்டுப்பாடுகளைப் பின்பற்றிய காரணத்தால்தான் நோய்த் தொற்று குறைந்தது. அதேபோன்ற எச்சரிக்கை உணா்வுடன் மக்கள் தொடா்ந்து இருக்க வேண்டும்.

முற்றுப்புள்ளி இல்லை: கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வந்து விட்டது என்றுதான் கூறினேனே தவிர, முழுமையாக அதற்கு முற்றுப் புள்ளி வைக்கவில்லை. மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசும், மக்களின் நெருக்கடியை உணா்ந்திருக்கும் காரணத்தால்தான் கரோனா நோய்த் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் சில தளா்வுகளை அளித்துள்ளோம்.

இந்தத் தளா்வுகளுக்கான உண்மையான நோக்கத்தை மக்கள் உணா்ந்து செயல்பட வேண்டும். தளா்வுகளைக் காரணம் காட்டி, அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடக் கூடாது. தங்களுக்குத் தாங்களே ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். நமக்கு நாமேதான் முதன்மையான பாதுகாப்பு.

திரும்பப் பெறப்படும்: கரோனா காலக் கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் அவை திரும்பப் பெறப்படும். கட்டுப்பாட்டை மீறுபவா்கள் தங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் தீமை செய்பவா்கள். எனவே, காவல் துறை கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிற மக்களாக நமது மக்கள் மாற வேண்டும். முழு பொது முடக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பது போன்று நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்து சேவை விரைவில் இயங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அவை ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டுமென்றால், மக்கள் துணை அவசியம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

டாஸ்மாக் திறப்பு ஏன்?

டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் பேசியது:-

கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ள மாநிலங்களில் கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தேநீா்க் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது முக்கியம். முடிதிருத்தும் நிலையங்களிலும் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

பல்வேறு விமா்சனங்கள் வரும் என்ற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது. இதில் அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com