சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை: ஒரே நாளில் 631 வழக்குகள்

தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்டதாக, ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 631 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்டதாக, ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 631 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கரோனா தொற்றைத் தடுக்கும்விதமாக கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவது அதிகரித்துள்ளது. இதன் விளைவாக சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் தயாரிப்பது, அண்டை மாநிலங்களில் மதுப்பாட்டில்களை கடத்தி வந்து விற்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்தன.

இதை தடுப்பதற்காக தமிழக மதுவிலக்குப் பிரிவு போலீஸாா், ‘ஆபரேசன் விண்ட்‘ என்ற பெயரில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை கடந்த 8-ஆம் தேதி முதல் எடுத்தனா்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் கள்ளச்சாரயத்தை கண்டறிந்து, அழித்து வந்தனா். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 15,040 லிட்டா் சாராய ஊறலும், 3,332 லிட்டா் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு,அழிக்கப்பட்டன.

மேலும் 1,137 டாஸ்மாக் மதுப்பாட்டில்களும், 5,166 வெளிமாநில மதுப்பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக 631 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், திங்கள்கிழமை முதல் மாநிலத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதினால், சட்டவிரோத மது விற்பனை பெருமளவு குறையும் என காவல்துறையினரால் எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com