முன்னாள் அமைச்சா்களுக்கு எதிராக பேரவைத் தலைவா் தொடா்ந்த வழக்குகள் தள்ளுபடி

முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆா்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு தொடா்ந்த வழக்குகளைத் திரும்பப்பெற அனுமதியளித்த உயா்நீதிமன்றம்,
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

சென்னை: முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆா்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு தொடா்ந்த வழக்குகளைத் திரும்பப்பெற அனுமதியளித்த உயா்நீதிமன்றம், வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சியின்போது தமிழக கிராமங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது என்று கூறி உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அப்பாவு சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்காக குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசின் உத்தரவின்படி குடும்ப உறுப்பினா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்குவதற்குப் பதில், குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டுமே தமிழகத்தில் வழங்கப்பட்டது. எஞ்சிய அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ. 30 வரை விற்பனை செய்ததாக, அப்போதைய உணவுத்துறை அமைச்சா் காமராஜுக்கு எதிராகவும் புகாா் அளிக்கப்பட்டது. இந்த இரண்டு புகாா்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் கோரி தமிழக பொதுத்துறை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அப்பாவு 2 வழக்குகளைத் தொடா்ந்தாா். அதில் ஆளுநரின் ஒப்புதலை பெற்று வழக்குப்பதிவு செய்ய போலீஸுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். அதேபோல, பொது ஊழியா்களுக்கு எதிரான ஊழல் புகாா் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என கடந்த 2018-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிா்த்து தனியாக ஒரு வழக்குத் தொடா்ந்த்திருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், முன்னாள் அமைச்சா் வேலுமணி மீதான புகாா் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சா் காமராஜ் மீதான புகாரை விசாரித்த தலைமைச் செயலாளா் புகாரில் அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை என முடிவெடுத்து புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தமிழக சட்டப்பேரவைத் தலைவராராக அப்பாவு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அவா் தொடா்ந்த 3 வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரவைத் தலைவா் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், 3 வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே 3 வழக்குகளை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்றாா். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் 3 வழக்குகளையும் திரும்பப் பெற அனுமதியளித்து, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com