நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும்  நிவாரண உதவி: தமிழக அரசு

நல வாரியத்தில் பதிவு செய்யாத  மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: நல வாரியத்தில் பதிவு செய்யாத  மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த  மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு தாக்கல் செய்த மனுவில், 
தமிழக அரசு கரோனா பேரிடர் கால நிவாரண உதவியாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம்  தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் சுமார்  50 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். அதில், 11 ஆயிரம் 499 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிலும், 2 ஆயிரத்து 541 பேர் மட்டுமே குடும்ப அட்டைகள் வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பொதுமுடக்கத்தின் போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. எனவே
குடும்ப அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், ரூ.4 ஆயிரம் நிவாரண உதவித் தொகையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முக சுந்தரம், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தமுள்ள 11,449 மூன்றாம் பாலினத்தவர்களில், குடும்ப அட்டை வைத்துள்ள 2,956 பேருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 8493 பேருக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது எனவே உண்மையான மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர், முகவரியை கொடுக்க வேண்டும்.

மேலும், உதவித்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்கள் குறித்து தெரிவிக்க ஏதுவாக வழக்கின் விசாரணையை, 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com