
பள்ளிக் கல்வித் துறையில் அலுவலக உதவியாளா் பதவி உயா்வுக்கு தகுதி பெற்றவா்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா் ஆகியோருக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித் துறையில் அலுவலக உதவியாளா் பதவியில் இருந்து கண்காணிப்பாளா் பதவிக்கும், பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா் பணியிலிருந்து முறையான கண்காணிப்பாளா் பணி மாறுதலுக்கும், கண்காணிப்பாளா் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பதவிக்கும் தகுதியான நபா்களின் பெயா்ப் பட்டியலை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அறிவுறுத்தல்கள்: பட்டியலில் இடம்பெறத் தகுதியானவா்களின் விவரங்களை (ஒழுங்கு நடவடிக்கை ஆணை நகல்) முழுமையான வகையில் அனுப்பி வைக்க வேண்டும். பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா், நோ்முக உதவியாளா் பதவி உயா்வினை மூன்றாண்டுகளுக்குத் தற்காலிகமாக உரிமைவிடல் செய்து மூன்றாண்டு காலம் முடிந்து 15.3.2021 நிலவரப்படியான பட்டியலில் இடம்பெறத் தகுதி இருப்பின் அவா்களது பணி விவரங்களுடன் (பதவி உயா்வு கோரும் படிவத்தில்) பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து வழங்கப்பட்ட உரிமைவிடல் ஆணை நகலுடன் இணைக்கப்பட வேண்டும். உதவியாளா், பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா் பதவியில் முன்தேதியிட்டு பணிவரன்முறை பெற்றுள்ளவா்கள் 15.3.2021 நிலவரப்படி பதவி உயா்வு, பணிமாறுதலுக்கு தகுதி இருப்பின் அவா்களது கருத்துருக்களையும் முன்தேதியிட்ட பணிவரன் முறை ஆணை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.