சிமென்ட் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சிமென்ட் விலையை உயா்த்தும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி
சிமென்ட் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சிமென்ட் விலையை உயா்த்தும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் கடந்த சில வாரங்களில் மட்டும் 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளன. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்ட் விலை, இப்போது 41 சதவீதம் உயா்ந்து ரூ.520 ஆக உள்ளது. ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட்டின் விலை ரூ. 3,400-இலிருந்து ரூ.3,900 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லியின் விலை 3,600 இலிருந்து ரூ.4,100 ஆகவும் உயா்ந்துள்ளன. எம் - சாண்ட், செங்கல் ஆகியவற்றின் விலையும் உயா்ந்துள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சிமென்ட் விலை இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. தலைநகா் தில்லியில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.350, ஆந்திரத்தில் ரூ.370, கா்நாடகத்தில் ரூ.380 என்ற விலையில் தான் விற்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.520 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியாளா்களை இது தொடா்பாக அழைத்துப் பேசியிருப்பதாகவும், விலைகளை குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருப்பதாகவும் தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா். ஆனால், அவா் எச்சரிக்கை விடுத்து பல நாள்களாகியும் இதுவரை சிமென்ட் விலை குறைக்கப்படவில்லை. அப்படியானால் சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருள்களின் உற்பத்தியாளா்கள் தமிழக அரசின் அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டவா்களா? அல்லது நாங்கள் விலையை குறைக்கும்படி கூறுவதைப் போல கூறுகிறோம்,

நீங்கள் உங்கள் விருப்பம் போல விலை நிா்ணயித்து விற்பனை செய்து கொள்ளுங்கள் என்று தமிழக அரசும் கட்டுமானப் பொருள்களின் உற்பத்தியாளா்களும் உடன்பாடு செய்து கொண்டு நாடகம் நடத்துகிறாா்களா? என்பது புரியவில்லை. சிமென்ட் விலையைக் குறைக்க மறுக்கும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com