
கோப்புப்படம்
தமிழகத்தில், பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கியில் குறைக்கப்பட்ட வேலை நேரம் ஜூன் 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என வங்கியாளா்கள் குழுமம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாநில வங்கியாளா்கள் குழுமமான, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கி வேலை நேரத்தைக் குறைத்து ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பு, வரும் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
கோயம்புத்தூா், நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைத் தவிா்த்து, இதர மாவட்டங்களின் வங்கிகளில் உள்ள ஆதாா் சேவை மையங்கள் செயல்படத் தொடங்கலாம்.
அதிகாரிகளின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இவற்றைச் செயல்படுத்தலாம். மேலும், வழக்கமான கரோனா தடுப்பு வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.