மாங்கனித் திருவிழா: காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்

காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை  அம்மையார் திருக்கல்யாண வைவபம் நடைபெற்றது.
மாங்கனித் திருவிழா: காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்
மாங்கனித் திருவிழா: காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்


காரைக்கால்:  காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை  அம்மையார் திருக்கல்யாண வைவபம் நடைபெற்றது.  

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோயில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும்  காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் தேவஸ்தானம் சார்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. 

கரோனா பொது முடக்கத்தால், மாங்கனித் திருவிழா கோயில் வளாகத்தினுள், பக்தர்களின்றி நடத்த புதுச்சேரி அரசு அனுமதித்தது.

இதன்படி முதல் நாளான திங்கள்கிழமை இரவு மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது. 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அம்மையாரின் திருக்கல்யாண வைபவம்  நடைபெற்றது. 
 
திருக்கல்யாண மேடையில்  காரைக்கால் அம்மையார் - பரமதத்தரை அருகருகே வீற்றிருக்கச் செய்து திருக்கல்யாண வைபவம் காலை 9 மணிக்குப் பின்  தொடங்கியது. முன்னதாக பரமதத்தர் குதிரை வாகனத்தில் பிராகாரம் சுற்றி மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில், சிறப்பு ஹோமம் நடத்தி, திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியர்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து பரமதத்தர் சார்பில், சிவாச்சாரியர் அம்மையாருக்கு காலை 10.30 மணியளவில் திருமாங்கல்யதாரணம் செய்தார்.   சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனைகள்  நடைபெற்றன. திருமாங்கல்யதாரணம் முடிந்து சுவாமிகள் இருக்கை மாறி அமறவைக்கப்பட்டனர். தொடர்ந்து 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன.

திருக்கல்யாணத்தின்போது பக்தர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. புதுச்சேரி அரசின் சிறப்பு அனுமதியின்படி, சுவாமிகளை தரிசனம் செய்ய ஏதுவாக பகல்  12 முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் வரிசையாக சென்று தரிசித்து வெளியேற அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கல்யாண நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, கோயில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) காசிநாதன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ரகுநாயகம் உள்ளிட்ட உபயதாரர்கள் கலந்துகொண்டனர்.

வழக்கமாக, திருக்கல்யாண உத்ஸவம் அம்மையார் கோயிலில் நடைபெறும். காலை நிகழ்வாக, காரைக்கால் அம்மையார், அம்மையார் குளத்துக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்வதும்,  பரமதத்தர் குதிரை வாகனத்தில் வீதியுலாவாக மண்டபத்துக்கு அழைத்து வருதலும் நடைபெறும். மணிமண்பதத்தில் ஆயிரக்கணக்கானோர் இருந்து திருக்கல்யாணத்தை காண்பர். எல்இடி திரையின் மூலம் வெளியே உள்ள பக்தர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஆயிரக்கணக்கானோருக்கு தாம்பூலப் பை வழங்கப்படும்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் கடந்த ஆண்டும், நிகழாண்டும் செய்யப்படவில்லை. கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் மட்டும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை  கோயில் அறங்காவல் வாரியத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், செயலர் எம்.பக்கிரிசாமி, துணைத் தலைவர் பி.ஏ.டி.ஆறுமுகம், பொருளாளர் டி.ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் கே.பிரகாஷ்  உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com