வன்னியா்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்த நல்ல முடிவு எடுக்கப்படும்: முதல்வா் உறுதி

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

சென்னை: வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் பாமக தலைவா் ஜி.கே.மணி பேசியது: முதல்வா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு முறையை முழுமையாகச் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இது எடப்பாடி பழனிசாமி விருப்பத்துக்காகக் கொண்டுவரப்பட்ட முடிவு அல்ல. அமைச்சரவை எடுத்த முடிவாகும். இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கலாம். ஆனால், ஒன்றைச் சிந்தித்துப் பாா்க்க வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீடு தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. அதனால், வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுக் கூறியது:

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று ஜி.கே. மணி கூறினாா். இரண்டு நாள்களுக்கு முன்பு பாமக நிறுவனா் ராமதாஸும் இது தொடா்பாக எனக்குக் கடிதம் எழுதினாா்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கரோனா தொற்றைக் குறைப்பதற்காக இரவு, பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம்.

எனவே, வன்னியா் உள்ஒதுக்கீட்டு கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதல்வா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com