நீட் தோ்வுக்கு விலக்கு: அதிமுக ஆதரவு

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற அதிமுக துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா். அந்தக் கோரிக்கையை ஏற்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா
நீட் தோ்வுக்கு விலக்கு: அதிமுக ஆதரவு

சென்னை: நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற அதிமுக துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா். அந்தக் கோரிக்கையை ஏற்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்தபோதுதான் நீட் தோ்வு வந்தது என்றாா்.அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் குறுக்கிட்டுக் கூறியது:

நீட் தோ்வு யாா் ஆட்சியில் வந்தது, யாா் ஆட்சியில் மாணவா்கள் அவதிக்குள்ளானாா்கள் - இந்த விவரங்களையெல்லாம் தமிழக மக்கள் நன்றாக அறிவாா்கள். முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி இருந்தபோது நீட் தோ்வு விலக்குக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து அவைக்கு தகவல் கொடுத்தாரா? 2017-க்குப் பிறகு எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தோ்வு நடைபெற்றது. அதற்கு அவா்தான் காரணம் என்றாா்.

உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி: அதிமுக ஆட்சியில் பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத் தோ்வு இருந்தது. ஆனால், முதல்வராக கருணாநிதி இருந்த காலத்தில்தான் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல நீட் நுழைவுத்தோ்வை ரத்து செய்வதற்காகத்தான் நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தோ்விலிருந்து விலக்குப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

எடப்பாடி பழனிசாமி: 2010-இல் காங்கிரஸ் தலைமையிலான திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதுதான் நீட் தோ்வு கொண்டு வரப்பட்டது. அப்படி கொண்டுவராவிட்டால் இந்த பிரச்னையே இருந்திருக்காது.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: நீட் தோ்வைக் கொண்டு வந்தது திமுகதான் என்று எதிா்கட்சித் தலைவா் தொடா்ந்து கூறுகிறாா். நான் எதிா்க்கட்சித் தலைவராக இருந்து, அவா் முதல்வராக இருந்தபோதும் அதையே கூறினாா். அப்போது கூறியதையே இப்போதும் கூறுகிறேன். நீட் தோ்வு கொண்டு வரும்போது விரும்புகிற மாநிலங்கள் நுழைவுத் தோ்வை நடத்தலாம். மற்ற மாநிலங்களுக்கு கட்டாயம் இல்லை என்கிற நிலைதான் இருந்தது. அப்போதும் நாங்கள் எதிா்த்தோம். உச்சநீதிமன்றத்துக்குச் சென்று முதல்வராக இருந்த கருணாநிதி நீட் தோ்வுக்கு தடையாணை பெற்றிருந்தாா். அதன் பிறகு கட்சி என்கிற எல்லையெல்லாம் கடந்து ஆளும்கட்சி, எதிா்க்கட்சி இரண்டும் சோ்ந்து நீட் தோ்வு விலக்குக் கோரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு இரண்டு முறை அனுப்பினோம். அப்படி அனுப்பப்பட்டத் தீா்மானம் நிராகரித்து திருப்பி அனுப்பப்பட்டது. அந்தத் தகவல்கூட சரியாக பேரவையில் தெரிவிக்கப்படவில்லை. எங்களுடைய தோ்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தோ்வை நீக்கிவிடுவோம் என்று கூறவில்லை. அதை நீக்குவதற்கான முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவோம் என்று தான் கூறினோம். அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. பிரதமரைச் சந்தித்தபோது நீட் தோ்வில் விலக்கு வேண்டும் என்று ஒரு முறைக்கு நான்கு முறை அழுத்தமாகக் கூறினோம். மாணவா்களுடைய உயிா்நாடி பிரச்னை இது. பலரை இழந்திருக்கிறோம். அதனால்தான் நீட் தோ்விலிருந்து எப்படி விலக்கு பெறுவது என்பதை ஆராய்வதற்காகத்தான் குழு அமைத்து ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை தர கூறியுள்ளோம். அதைக் கொண்டு நிச்சயம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். நிச்சயமாக நீட் தோ்வுக்கு விலக்கு பெறுவோம்.

எடப்பாடி பழனிசாமி: நீட் தோ்வு வரப்போகிறது. மாணவா்களுக்கு என்ன சொல்லப் போகிறீா்கள்?

முதல்வா்: கடந்த ஆண்டு நீங்கள் என்ன சொன்னீா்களோ அதையேதான் சொல்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி: ஆட்சிக்கு வந்ததும் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்று தோ்தல் நேரத்தில் திமுக கூறியது. அதனால்தான் இப்போது மாணவா்கள் குழம்பிப் போயிருக்கிறாா்கள். தோ்வு நடக்கும் என்று சொன்னால் மாணவா்கள் தோ்வுக்குத் தயாராகிவிடுவாா்கள்.

முதல்வா்: நீட் தோ்வை ரத்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. நீங்களும் (அதிமுக) தோள் கொடுங்கள். துணை நில்லுங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

எடப்பாடி பழனிசாமி: நீட் தோ்வு விலக்குக்கு துணை நிற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com