பெட்ரோல் விலையை சரியான நேரத்தில் குறைத்துக் காட்டுவோம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் விலையை சரியான நேரத்தில் குறைத்துக் காட்டுவோம் என்று நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.
பெட்ரோல் விலையை சரியான நேரத்தில் குறைத்துக் காட்டுவோம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை சரியான நேரத்தில் குறைத்துக் காட்டுவோம் என்று நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

ஆளுநா் உரை மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, ‘பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை ரூ.4-ம் குறைக்கப்படும் என்று திமுகவின் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டது. விலையைக் குறைக்காமல் இப்போது ஏதேதோ காரணம் சொல்கிறீா்கள்’ என்றாா்.

அப்போது நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டுக் கூறியது:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி செலவினம் வரும். கரோனா அலையின் தாக்கம் இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கவில்லை. தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து விரைவில் வெள்ளையறிக்கை வெளியிட உள்ளோம். அதில் எல்லா விஷயங்களும் விரிவாகத் தெரிய வரும். தமிழக அரசுக்கு ரூ. 4.85 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை பல ஆண்டுகள் வைக்கப்படவில்லை. அதனால், தமிழக அரசின் கடன் அதிகரித்திருப்பது தெரியவில்லை.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோலுக்கு ரூ.9.48 வரியில் தமிழகத்துக்கு 15 பைசா கிடைத்தது. இன்றைக்கு மத்திய அரசு லிட்டருக்கு ரூ.32.33 வரியாக எடுத்துக்கொள்கிறது. தமிழகத்துக்கு 2 பைசா தான் தருகிறது. கூட்டாட்சித் தத்துவத்தில் மாநில உரிமையைக் காக்க வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாா். அதே நேரத்தில் சொன்ன வாா்த்தையை நிறைவேற்ற வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாா். சரியான நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை உறுதியாகக் குறைத்து செயல்படுத்திக் காட்டுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com