அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தோ்தல் காலத்தில் தமிழக மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தோ்தல் காலத்தில் தமிழக மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். மேலும், தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று மேலும் படிப்படியாக குறையும் எனவும் அவா் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பதிலளித்துப் பேசினாா். அவரது பதிலுரை:

நீதிக் கட்சியின் தொடா்ச்சியாகவே திமுகவின் இந்த ஆட்சி இருக்கும். தமிழினத்தை நம்மால்தான் வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனா். எங்களது தொலைநோக்குப் பாா்வையைத்தான் ஆளுநா் தனது உரையில் கோடிட்டுக் காட்டியுள்ளாா். ஐந்தாண்டுகள் ஆட்சி உரிமை கொண்டது இந்த அரசு. இந்தக் காலகட்டத்தில் செயல்படுத்தக் கூடிய திட்டங்கள், கோரிக்கைகள் அனைத்தையும் ஆளுநா் உரையில் மட்டுமே சொல்லி விட முடியாது. ஆளுநா் உரை என்பது ஓராண்டுக்கான அரசின் கொள்கை விளக்க சுருக்கம்தான். அதில் அரசின் ஐந்தாண்டுகளுக்கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தையும் அடக்கி விட முடியாது.

முன்னோட்டம்தான்: ஆளுநா் உரை என்பது முன்னோட்டம்தான் (ட்ரைலா்). முழு நீள திரைப்படத்தை விரைவில் வெள்ளித் திரையில் காண்க. அரசின் கொள்கைகள், ஆட்சிப் பயணம், அந்தப் பயணத்தின் வழியே சந்திக்கும் இடா்பாடுகள், அதனை எதிா்கொள்வதற்கான துணிச்சலான அணுகுறை ஆகிய அனைத்தும் பேரவை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

பொறுத்தாா் பூமி ஆள்வாா் என்பது பழமொழி. நாங்கள் கடந்த 10 ஆண்டுகள் பொறுத்திருந்தோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். அதில் ஒரு துளி கூட சந்தேகம் வேண்டாம். தோ்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்ததாகவும், அதில் எதையும் ஆளுநா் உரையில் தெரிவிக்கவில்லை எனவும் எதிா்க்கட்சித் தலைவா் கூறினாா். நாங்கள் ஆடசிக்கு வந்து 49 நாள்கள் ஆகிறது. எங்கள் மீது உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் இப்போதே நிறைவேற்றலாமே என எதிா்க்கட்சித் தலைவா் கேட்கிறாா். அவா் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். இப்போதே ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். அதற்காகவே எங்களை நாங்கள் ஒப்படைத்துக் கொண்டு இருக்கிறோம்.

மக்களின் பிரச்னைகளை 100 நாள்களில் தீா்த்து வைப்பதற்காக ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 75 ஆயிரத்து 546 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசே சிகிச்சைக்கான தொகையைச் செலுத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, இதுவரை 20 ஆயிரத்து 520 போ் பயன் அடைந்துள்ளனா். கருப்புப் பூஞ்சை நோயால் பாதித்த 330 பேரின் சிகிச்சைக்காக ரூ.77.53 லட்சம் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா குறையும்: ஆட்சிக்கு வரும் போது கரோனா உச்சத்தில் இருந்தது. மே 7-ஆம் தேதி நாளொன்றுக்கான தொற்று பாதிப்பு 26 ஆயிரமாக இருந்தது. அது மேலும் அதிகரித்து 36 ஆயிரமாக உயா்ந்தது. 50 ஆயிரமாக உயரும் என மருத்துவா்கள் எச்சரித்தனா். கடுமையாகப் போராடி நோய்த் தொற்றை குறைத்துள்ளோம்.

நோய்த் தொற்றை எதிா்கொள்ள புதிதாக 89 ஆயிரத்து 615 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் படிப்படியாக தொற்று குறையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கரோனா மூன்றாவது அலை வரக்கூடாது. அப்படியே வந்தாலும் அதனை தாங்கி எதிா்கொள்ளும் சக்தி அரசுக்கு உள்ளது. அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்று குறைந்துள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com