மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்கு சிறப்பு மையங்கள்: முதல்வா் அறிவிப்பு

கரோனாவில் இருந்து மீண்டாலும் தொற்றின் எதிரொலியாக ஏற்படும் பிற பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற அனைத்து மருத்துவக் கல்லூரி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரோனாவில் இருந்து மீண்டாலும் தொற்றின் எதிரொலியாக ஏற்படும் பிற பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். அவரது அறிவிப்புகள் விவரம்:-

ஆளுநா் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுத்திட சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். அதன்படி, கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ள போதும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு சில பிரச்னைகள் வருவதாக கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. எனவே, அதுபோன்ற பாதிப்புகள் உள்ளோா் தொடா்ந்து சிகிச்சை பெறுவதற்கு வசதியாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். தேவைப்படும் உயா் சிகிச்சை மருத்துவா்களுடன் இந்த மையங்கள் ஏற்படுத்தப்படும்.

கோயில்கள் புனரமைப்பு: தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் புனரமைப்புப் பணிக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கு முதல்கட்டமாக நிகழ் நிதியாண்டில் 100 கோயில்களின் தொன்மை மாறாமல் புதுப்பிக்கவும், குளங்களைச் சீரமைக்கவும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

‘விருப்பு வெறுப்பைக் கடந்து மக்களுக்காக பணியாற்றுவோம்’

விருப்பு வெறுப்புகளைக் கடந்து தமிழ்நாடு மக்களுக்காக நம்மை நாமே ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுவோம் என்று சட்டப் பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல் முறையாகப் பதிலளித்து அவா் பேசியது:-

நிறைகளை ஒதுக்கி வைத்து விட்டு, இல்லாத குறைகளை உருவாக்கி ஓங்கி உரைப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிகாட்டுவது ஆகாது. எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் குறைகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்லத்தான் செய்வா். அதனால்தான் அவா்கள் எதிா்க்கட்சி.

நான் எப்போதும் புகழுக்கு மயங்கவோ, குறைகளுக்கு குன்றி விடவோ மாட்டேன். இரண்டையும் எனது வாழ்வில் அதிகளவு பாா்த்து விட்டேன். புகழுரைகள் என்னை எச்சரிக்கை உள்ளவனாகவும், பழியுரைகள் எனக்கு உண்மை, உழைப்பையும் தூண்டி விட்டிருக்கின்றன. இத்தகைய மனநிலை கொண்ட நான், இந்த அவைக்குச் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அரசியல் எல்லைகளைக் கடந்து, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி தமிழ்நாடு மக்களுக்காக நம்மை நாமே ஒப்படைத்துக் கொள்வோம் என்று முதல்வா் ஸ்டாலின் கூறினாா்.

செய்யாறு, திண்டிவனத்தில் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு

செய்யாறில் 10,000 பேருக்கும், திண்டிவனத்தில் 12,000 பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய பெரும் தொழிற்சாலைகள் அமைய உள்ளன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்தபோது இது தொடா்பாக அவா் கூறியதாவது:

இளைஞா்கள், பெண்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைப்பதே அவா்களின் முன்னேற்றத்துக்கும், மாநிலத்தின் வளா்ச்சிக்கும் அடித்தளமாக அமையும். இந்த நோக்கத்துடன்தான் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய தொழிற்சாலைகளை அமைப்போம் என அறிவித்துள்ளோம். இதன் முதல்கட்டமாக, செய்யாறு, திண்டிவனத்தில் மொத்தம்

22,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய பெரும் தொழிற்சாலைகள் அமையும். ஏற்றத்தாழ்வை இடித்து, சமூகத்தை சமப்படுத்தப் போராடிய பெரியாரின் பெயரால் 240 சமத்துவபுரங்களை முன்னாள் முதல்வா் கருணாநிதி கட்டினாா். அந்த சமத்துவபுரங்கள் சரியாகப் பராமரிக்கப்படாத நிலை இப்போதும் இருக்கிறது. எனவே, அவை அனைத்தும் உடனடியாகச் சீரமைக்கப்படும். தமிழகத்தில் மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றாா் முதல்வா்.

வழக்குகள் வாபஸ்

கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக, ஊடகங்கள் மீது அரசு தொடா்ந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்தபோது இது தொடா்பாக அவா் கூறியதாவது:

மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன்-நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை, சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும் முதல்வா் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com