கரோனா  தடுப்பூசி தட்டுப்பாடு: காரிப்பட்டியில் நீண்ட வரிசையில் விடிய விடிய காத்திருந்த மக்கள்!

காரிப்பட்டியில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, ஏராளமான பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்றபடி விடிய விடிய காத்திருந்தனர்.
காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பாக, தடுப்பூசி போட்டுக் கொள்ள விடிய விடிய நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பாக, தடுப்பூசி போட்டுக் கொள்ள விடிய விடிய நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.


 
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், காரிப்பட்டியில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, ஏராளமான பொதுமக்கள்,  நீண்ட வரிசையில் நின்றபடி விடிய விடிய காத்திருந்தனர்.

கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவல், சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால், கரோனா  பெருந்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள, வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாழப்பாடி பகுதியில் பேளூர், திருமனூர் மற்றும் காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரு நாள்களுக்கு ஒரு முறை, தடுப்பூசி 200 முதல் 300 நபர்களுக்கு மட்டுமே  டோக்கன் முறையில் தடுப்பூசி போடப்படுவதால்,  தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு செல்வோருக்கு டோக்கன் கிடைக்காததால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், தடுப்பூசி டோக்கன் பெறுவதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்..

காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,  டோக்கன் பெற்று  தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு,  நள்ளிரவிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து, நீண்ட வரிசையில் நின்றபடி விடிய விடிய காத்திருந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது: இரண்டு நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே கரோனா  தடுப்பூசி போடப்படுகிறது.  200 முதல் 300 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வருகிறது. இதனால், முன்கூட்டி வந்து காத்திருந்தால் மட்டுமே டோக்கன் கிடைக்கிறது. எனவே தான், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நள்ளிரவிலேயே வந்து, காரிப்பட்டி  அரசு ஆரம்ப சுகாதாரதிற்கு முன்பாக நீண்ட வரிசையில் விடிய விடிய காத்திருக்கிறோம். 

மருத்துவ பணியாளர்கள் வந்ததும், டோக்கன் பெற்று ஊசியை போட்டுக் கொள்கிறோம். எனவே, கரோனா  தடுப்பூசி வழங்குவதை அதிகரிக்க வேண்டும். தட்டுப்பாடின்றி அனைத்து மக்களுக்கும் தினம்தோறும் தடுப்பூசி போடுவதற்கு, சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தற்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து கிராமங்களிலும் உள்ள துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு உண்டான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com