கரோனா 3-ம் அலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலை முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலை முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இன்று (29-6-2021) வரை 353 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 இலட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்கள்.

இதனையடுத்து, சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினையும், கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயினையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார்கள்.

தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com