டீசல் விலை உயர்வு: நாகையில் டிராக்டரை கயிற்றால் கட்டி இழுத்து விவசாயிகள் போராட்டம்

டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாகையை அடுத்த செல்லூரில் விவசாய நிலத்தில் டிராக்டரை கயிற்றால் கட்டி இழுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாகையை அடுத்த செல்லூரில் டிராக்டரை கயிற்றால் கட்டி  இழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்.
டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாகையை அடுத்த செல்லூரில் டிராக்டரை கயிற்றால் கட்டி  இழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்.

நாகப்பட்டினம்: டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாகையை அடுத்த செல்லூரில் விவசாய நிலத்தில் டிராக்டரை கயிற்றால் கட்டி இழுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் அனைத்துத் தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டீசல் விலை உயர்வால் உழவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெட்ரோல், டீசல்  விலை உயர்வைக்  கண்டித்தும், டீசல் விலையேற்றத்தைக்  குறைக்க வலியுறுத்தியும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.  

இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் பொதுச் செயலாளர் காவிரி வி.தனபாலன் தலைமை  வகித்தார். நாகை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று விவசாய நிலத்தில் டிராக்டரை  கயிற்றால் கட்டி இழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டம்  நிறைவில், காவிரி வி.தனபாலன் கூறியது: கரோனா நோய்த்தொற்று பரவலால் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில் வேளாண்மைத் தொழில் மட்டுமே இந்தியாவை காத்து வருகிறது.

ஒரு ஏக்கரில் உழவு செய்ய 40 லிட்டர் தேவையாக உள்ளது. கடந்த ஆண்டில் ரூ. 2,000-க்கு வாங்கிய 40 லிட்டர் டீசல், விலை உயர்வால் ரூ. 4 ஆயிரத்துக்கு வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள்  உள்ளாகியுள்ளனர்.

வேளாண்மையும், விவசாயமும் காப்பற்றப்படவேண்டும் என்றால் மத்திய அரசு டீசல் மீதான உற்பத்தி வரி, கலால் வரியைக் குறைத்து ஒரு லிட்டர் டீசல் ரூ. 50-க்கு கிடைக்கச் செய்ய வேண்டும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 50  என்ற விலையிருக்கும்போது இந்தியாவில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்வது ஏற்புடையது அல்ல. மக்கள்தொகையில்  உலகளவில்  2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் இதுபோன்ற விலை உயர்வு என்பது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் சிதைத்து விடும். நாட்டைக் காப்பாற்றும் விவசாயிகளை காப்பற்றப்பட வேண்டுமானால் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் அல்லது அதற்கு  இணையான டீசல் மானியத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகள் தற்போதையை நிலையை அரசுகளுக்கு  உணர்த்தவே  இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com