
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது கொடுக்கப்பட்ட புகாா் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இது தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடந்த 21-ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றாா். முதல்வரின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறையின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் அங்கு சென்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்தப் பெண் அதிகாரி, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோரிடம் கடந்த 23-ஆம் தேதி புகாா் அளித்தாா்.
பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகாா் அடிப்படையில் விசாரணை செய்ய விசாகா கமிட்டி அமைத்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் 24-ஆம் தேதி உத்தரவிட்டாா். இக் குழு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண் எஸ்பி அளித்த புகாா் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்ய தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டாா்.
இப்புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, முறைப்படி விசாரணையை ஓரிரு நாள்களில் சிபிசிஐடி அதிகாரிகள் தொடங்குவாா்கள் என கூறப்படுகிறது.