டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பாலியல் வழக்கு: விசாரணை அதிகாரியாக பெண் எஸ்பி நியமனம்

பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது சிபிசிஐடி தொடா்ந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பெண் எஸ்பி நியமிக்கப்பட்டாா்.

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது சிபிசிஐடி தொடா்ந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பெண் எஸ்பி நியமிக்கப்பட்டாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடந்த 21-ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றாா். முதல்வரின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறையின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் அங்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் அதிகாரி, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோரிடம் கடந்த 23-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் விசாரணை செய்ய விசாகா கமிட்டி அமைத்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் 24-ஆம் தேதி உத்தரவிட்டாா். இக்குழு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி வழக்கு: இந்நிலையில் பெண் எஸ்பி அளித்த புகாரை விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டாா். இப்புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், ராஜேஷ்தாஸ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடக்கினா்.

இந்த வழக்கில் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனும் சோ்க்கப்பட்டுள்ளாா். இவா், பெண் எஸ்பியை மறித்து, காா் சாவியைப் பறித்ததாகப் புகாா் எழுந்ததது. இப்புகாரின் அடிப்படையில் வழக்கில் எஸ்பி கண்ணனும் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக பெண் ஐபிஎஸ் அதிகாரி முத்தரசியை நியமனம் செய்து சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். ராஜேஷ்தாஸ், கண்ணன் மீது விழுப்புரம் சிபிசிஐடி பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அப்பிரிவு அதிகாரிகள் அங்கு முகாமிட்டு விசாரணையைத் தொடக்கத் திட்டமிட்டுள்ளனா். புகாரில் சிக்கியுள்ள ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகிய இருவரும் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com