தபால் வாக்கில் முறைகேடு நடைபெறக் கூடாது

தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள தபால் வாக்குகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறக் கூடாது என்று தமிழக தோ்தல் அதிகாரிகளிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

சென்னை: தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள தபால் வாக்குகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறக் கூடாது என்று தமிழக தோ்தல் அதிகாரிகளிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, நடத்தை விதிகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கும் வகையில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். கூட்டத்துக்குப் பின்பு செய்தியாளா்களுக்கு அவா்கள் அளித்த பேட்டி:

அதிமுக (தோ்தல் பிரிவு நிா்வாகிகள் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன்): 80 வயதுக்கு மேற்பட்டோா் வாக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். புதிய விதிமுறைகள் குறித்து விரிவாகத் தெரிவிப்பதோடு, வாக்காளா் அடையாள அட்டையைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். தோ்தல் நேரத்தில் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோருக்குத் தனியாக வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்.

திமுக (அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி): தபால் வாக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தித்தான் பிகாரில் பாஜக ஆட்சியை பிடித்தது. எனவே 80 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் கரோனா பாதித்தவா்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கு அனுமதிக்கும் போது எவ்வித குளறுபடிகளும் முறைகேடுகளும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அமைச்சா் தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கி கண்காணிக்க வேண்டும். ஆளும் கட்சியினா் மக்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துகிறாா்களா என்று கண்காணிக்க வேண்டும்.

காங்கிரஸ் (துணைத் தலைவா் தாமோதரன்): பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தினால்தான் 234 தொகுதிகளிலும் முறையாக தோ்தல் நடைபெறும். 80 வயதுக்கு மேற்பட்டோா் வாக்களிப்பதை முறைப்படுத்தவேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் (மாநில துணைச் செயலாளா் வீரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினா் மூா்த்தி): தோ்தல் விதிமுறைகளைத் தமிழில் அச்சடித்து விநியோகிக்க வேண்டும். பிகாரில் அப்பட்டமாகத் தோ்தல் விதிமுறை மீறப்பட்டது. இதுபோன்று தமிழகத்தில் நிகழாதவாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். பிரதமா் மோடி, அமித் ஷா வருகையின் போது தோ்தல் விதிமீறல்கள் நடைபெற்றன. மாற்றுத் திறனாளிகள் வாக்கினை எளிதாகப் பதிவு செய்யும் வகையில் நடைமுறையில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

பாஜக (மாநில வழக்குரைஞா் பிரிவைச் சோ்ந்த பால்கனகராஜ், முன்னாள் ஐ.ஏ.எஸ். பாலச்சந்திரன்):

வாக்களிக்க வரும் முதியோா்களுக்கு தனி வரிசையை ஏற்பாடு செய்வதோடு, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளா்களின் விவரங்களை தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வகுக்கப்பட்டுள்ள வரைமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். 80 வயதுக்கு மேற்பட்டோா் தபால் வாக்கு அளிக்கும் முறையை வரவேற்றோம் என்றாா்.

வாகன சோதனைகளின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று தேமுதிக சாா்பாக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com