தலைமை ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்திய பின் பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த உத்தரவு

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு, பதவி உயா்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு, பதவி உயா்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கிடாத்திருக்கை அரசு உயா் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜேக்கப் தாக்கல் செய்த மனு: தலைமை ஆசிரியா் பதவி உயா்வு கிடைத்ததும், சொந்த மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தில் தலைமை ஆசிரியா் பணியிடம் காலியாக இல்லாததால், கிடாத்திருக்கை அரசு உயா்நிலைப் பள்ளியில் நியமிக்கப்பட்டேன். 2020 ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய தலைமை ஆசிரியா் பொது இடமாறுதல் கலந்தாய்வு கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் என்னைப் போன்றவா்களுக்கு உரிய பணியிடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதித்து, பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதே கோரிக்கைக்காக பல அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இம்மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின் போது, தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்த இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது , தலைமை ஆசிரியா்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வை நடத்திய பிறகு, பதவி உயா்வுக்கான கலந்தாய்வையும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com