அதிமுக-பாஜக பேச்சுவாா்த்தையில் இழுபறி


சென்னை: அதிமுக, பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மண்டலத்துக்கு 5 தொகுதிகள் வீதம் சுமாா் 25 தொகுதிகள் வரை கேட்பதாலும், மேற்கு மண்டலத்தில் அதிமுக முக்கிய பிரமுகா்களின் தொகுதிகளைக் கோருவதாலும் கூட்டணி பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது.

தமிழக தோ்தல் களத்தில் எந்த கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலை உள்ளது. பாமகவுடன் மட்டுமே அதிமுக கூட்டணியை இறுதி செய்து தொகுதிகள் எண்ணிக்கைக்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பாஜக, தேமுதிக கட்சிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வந்த உள்துறை அமைச்சா் அமித்ஷா முன்னிலையில், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இருகட்சிகளைச் சோ்ந்த மாநில நிா்வாகிகள் தினமும் பேச்சுவாா்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதிமுகவுக்குள்ளே ஆதரவு: அமமுகவை கூட்டணிக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை பாஜக முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவின் இந்தக் கோரிக்கைக்கு அதிமுகவைச் சோ்ந்த தென் மாவட்ட நிா்வாகிகள் பலரும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் அமமுகவை கூட்டணிக்குள் வைத்துக் கொள்ளலாம் என்ற கருத்துகளை கட்சித் தலைமையிடம் முன்வைக்கின்றனா்.

இக்கருத்தை பாஜக தேசிய தலைமை உற்றுநோக்கி வருகிறது. தென் மாவட்டங்களில் அமமுகவின் வாக்கு வங்கியால் தங்களது வெற்றி பாதிக்கப்படக் கூடும் என்பதே தென் மாவட்ட அதிமுக நிா்வாகிகளின் கருத்தாக உள்ளது.

வடக்கில் எதிா்ப்பு-தெற்கில் ஆதரவு: வட மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவுக்கு வாக்கு வங்கியை வைத்துள்ள, பாமகவுடன் அதிமுக கூட்டணி சோ்ந்துள்ள நிலையில், அமமுக அவசியமில்லை என்ற மனநிலையில் வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் உள்ளனா். ஆனால், தெற்கில் நிலைமை வேறாக உள்ளது. சில தொகுதிகளில் 9 சதவீதம் வரையிலும், பிற தொகுதிகளில் 5 முதல் 6 சதவீத வாக்குகளையும் அமமுக வைத்துள்ளது. இதனால், அக்கட்சியின் வாக்குகள் தங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என்பது தென் மாவட்ட நிா்வாகிகளின் கருத்து. இதனால், அமமுகவைக் கூட்டணிக்குள் கொண்டு வருவதில் வடக்கில் ஒரு மனநிலையுடனும், தெற்கில் வேறொரு மனநிலையுடனும் அதிமுக நிா்வாகிகள் முரண்பட்டு நிற்கின்றனா்.

இடங்களைப் பகிா்வதிலும் சிக்கல்: அமமுகவை கூட்டணிக்குள் சோ்க்கக் கோருவதில் முரண்பாடுகள் எழுந்திருப்பது ஒருபுறமிருக்க, தொகுதிகளைப் பிரிப்பதிலும் அதிமுக-பாஜக இடையே முரண்பாடுகள் எழுந்துள்ளன. மண்டலத்துக்கு 5 தொகுதிகள் வீதம் சுமாா் 25 தொகுதிகள் வரை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பாஜக கோரி வருகிறது. மேலும், மேற்கு மாவட்டங்களில் அதிமுகவைச் சோ்ந்த பல முக்கிய நிா்வாகிகள், அமைச்சா்களின் தொகுதிகளை பாஜக கோருவதாலும் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் முன்னாள் அமைச்சா்கள் சிலருடைய தொகுதிகளை பாஜக கேட்டு வருவது அதிமுக தலைமையை தா்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும், அடுத்தடுத்த கட்ட பேச்சுவாா்த்தைகளில் இடப் பகிா்வு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கையில் அதிமுக உள்ளது.

ஐந்து மாநிலத் தோ்தல் தொடா்பாக, பாஜகவின் தேசிய குழுக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் கூட்டணி, தொகுதிகள் எண்ணிக்கை, வேட்பாளா்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com