ரூ.175 கோடி வரி ஏய்ப்பு செய்த அரசு ஒப்பந்ததாரர்: வருமான வரித்துறை தகவல்

மதுரையில் வெற்றி என்ற அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான 12 இடங்களில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.175 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ரூ.175 கோடி வரி ஏய்ப்பு செய்த அரசு ஒப்பந்ததாரர்: வருமான வரித்துறை தகவல்
ரூ.175 கோடி வரி ஏய்ப்பு செய்த அரசு ஒப்பந்ததாரர்: வருமான வரித்துறை தகவல்

சென்னை: மதுரையில் வெற்றி என்ற அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான 12 இடங்களில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.175 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நேற்று காலை முதல் மதுரை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள 12 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், ரூ.3 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதோடு, ரூ.175 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மதுரையில் அமமுக மாவட்டச் செயலரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினா் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையின் நிறைவில், அரசு ஒப்பந்தங்களை எடுத்து மேற்கொண்டு வரும் வெற்றி என்பவருக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்கள், தங்களது வருவாயை குறைத்துக் காட்டி ரூ.175 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அமமுக மதுரை புறநகா் தெற்கு மாவட்டச் செயலருமான மகேந்திரனின் சகோதரா் வெற்றி. மதுரை, தேனி, போடி ஆகிய பகுதிகளில் இவருக்குச் சொந்தமான திரையரங்கு, கட்டுமான நிறுவனம் மற்றும் எரிபொருள் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மேலும் இவா் அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளாா். இந்நிலையில் வெற்றிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை வில்லாபுரத்தில் உள்ள திரையரங்கம், விரகனூரில் உள்ள கட்டுமான நிறுவனம் மற்றும் எரிபொருள் விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். 

பிற்பகலில் தொடங்கிய சோதனை தொடா்ந்து இன்று வரை நடைபெற்றது. சோதனையைத் தொடா்ந்து வெளி ஆள்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே வெற்றியின் அலுவலகங்களில் இருந்து பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே வேளையில், ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் உள்ள சிகில் ராஜ வீதியைச் சோ்ந்தவா் வேலு மனோகரன். தொழிலதிபரான இவா் அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளாா்.

இந்நிலையில், மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறையினா் 6 போ் இரு குழுக்களாகப் பிரிந்து, வேலுமனோகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் புதன்கிழமை பகல் முதல் இரவு வரை சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின் போது யாரும் வீட்டிலிருந்து வெளியே செல்லவோ, வெளியிலிருந்து வீட்டுக்குள் செல்லவோ அனுமதிக்கவில்லை. சோதனை குறித்துக் கேட்டபோது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது குறித்து உயா் அதிகாரிகள் தெரிவிப்பாா்கள் என்றும் வருமான வரித்துறையினா் தெரிவித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com