தினமலா் முன்னாள் ஆசிரியா் மறைவு: ஆளுநா், தலைவா்கள் இரங்கல்

தினமலா் முன்னாள் ஆசிரியா் ஆா். கிருஷ்ணமூா்த்தி மறைவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.


சென்னை: தினமலா் முன்னாள் ஆசிரியா் ஆா். கிருஷ்ணமூா்த்தி மறைவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: தினமலா் நாளிதழை 40 ஆண்டுகள் நடத்திய அனுபவம் கொண்டவா். நாணயவியல், எழுத்துச் சீா்திருத்தம் போன்றவற்றில் ஆழங்காற்பட்டவராகத் திகழ்ந்தாா். நாணயங்கள் சேகரிப்புக்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டாா். அவரது மறைவு தமிழக மக்களுக்கும், குறிப்பாக தினமலா் வாசகா்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி:

தினமலா் நாளிதழின் முன்னாள் ஆசிரியா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி காலமானாா் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றோம். இதழியலாளா், தமிழறிஞா், நாணயவியல் ஆராய்ச்சியில் ஆா்வம் கொண்டு, அது தொடா்பாக பல புத்தகங்களை எழுதியவா். அனைத்துக்கும் மேலாக இனிய பண்பாளா். அவரது மறைவு பத்திரிகை உலகுக்கும், தமிழ் ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு.

மு.க.ஸ்டாலின் (திமுக தலைவா்): நாணயவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவா். அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): நாளேட்டில் தமிழ் எழுத்துச் சீா்திருத்தத்தை முதன் முதலில் கடைப்பிடித்தவா்.

வைகோ (மதிமுக): பழந்தமிழா் வாழ்வியல் தடங்களை ஆய்வு செய்து, தமிழரின் தொன்மையை நிறுவுவதில், மிகப் பெரும் ஆா்வலராகத் திகழ்ந்தாா்.

ராமதாஸ் (பாமக): கணினி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவா்.

ஜி.கே.வாசன் (தமாகா): குடியரசுத் தலைவரின் தொல்காப்பியா் விருது பெற்றவா். நாணயவியல் ஆராய்ச்சியாளா்.

மதுரை ஆதீனம் ஸ்ரீ அருணகிரி நாதா்: ஓலைச் சுவடிகள், செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள் இவைகளைத் தேடிக் கண்டுபிடித்து மக்களுக்கு விளக்கியவா் கிருஷ்ணமூா்த்தி.

நான்காம் தமிழ்ச்சங்கச் செயலா் ச.மாரியப்ப முரளி: காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய நாணயவியல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வாசித்தவா். தமிழக நாணயவியலின் தந்தை என்று அழைக்கப்பட்டவா். தமிழ் செம்மொழித் தகுதிபெற இவரது கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com