கடின உழைப்பே மகளிரின் வெற்றியைச் சாத்தியமாக்குகிறது: துணைவேந்தர் பேச்சு

பெண்கள் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் வெற்றி எனும் இலக்கை எளிதாக அடைய முடியும்” என பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.
கடின உழைப்பே மகளிரின் வெற்றியைச் சாத்தியமாக்குகிறது: துணைவேந்தர் பேச்சு
கடின உழைப்பே மகளிரின் வெற்றியைச் சாத்தியமாக்குகிறது: துணைவேந்தர் பேச்சு

 
“வெற்றி பெற்ற பல சாதனைப் பெண்கள் தங்கள் வெற்றியைக் கடின உழைப்பின் மூலமாகவே சாத்தியமாக்கி இருப்பதனால், பெண்கள் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் வெற்றி எனும் இலக்கை எளிதாக அடைய முடியும்” என பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.

பெரியார் பல்கலைக்கழக மகளிரியல் மையம் சார்பில் உலக மகளிர் தின விழா இன்று (08.03.2021) கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் உரையாற்றினார். அவர் தமது உரையில், “பெரியார் பல்கலைக்கழகம் மகளிருக்கான உரிமைகளை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் செயலாற்றி வருகிறது. 

பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் பெண் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கான பிரத்யேக வளாகம் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மகளிருக்கான கட்டமைப்பு வசதிகள் இவ்வளாகத்தில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பெரு வெற்றியை அடைந்த அறிவியலாளர் மேரி கியூரி உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் தங்களது விடாமுயற்சியினாலும், கடின உழைப்பினாலும் வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளனர். எனவே, இளம் தலைமுறை மகளிர் தங்களுக்கான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் சமத்துவமான சமூகத்தில் தங்களது தனித்துவமான அடையாளத்தை நிறுவ முடியும்” என்றார்.

நிகழ்ச்சியில், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் டி.ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் “

தாய்வழிச் சமூகத்தினைக் கொண்டாடியது நம்முடைய தமிழ்ப் பாரம்பரியம். ஆதி சமூகத்தின் கட்டமைப்பில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் முன்னின்று பல பணிகளை மேற்கொண்டனர். வேளாண்மை, போர் போன்ற மிக முக்கிய செயல்பாடுகளைப் பெண்கள் தலைமைத் தாங்கி வழிநடத்தியுள்ளனர். ஆனால் இடைக்காலத்தில் பெண்களின் உரிமைகள் முதலில் பறிக்கப்பட்டு, பின்னர் அந்த உரிமைகள் முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டன. 

மகாகவி பாரதி, தந்தை பெரியார் போன்றோர் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த பின்னரே பெண்களுக்கான உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டன. இவர்களின் வலிமையான குரலுக்குப் பின்பே தமக்கு இவ்வளவு உரிமைகள் இருக்கின்றன என்பதனை பெண்கள் உணரத் தொடங்கினர்.1907-ஆம் ஆண்டு பெண்களுக்கான வாக்குரிமை கோரிதான் முதலில் பெண்களுக்கான குரல் உலக அரங்கில் எழுப்பப்பட்டது. 

வாக்குரிமை கேட்டுத் தொடங்கிய பெண்களின் எழுச்சி, போர் நிறுத்தம், சமாதானம், பணியிடத்துச் சமவாய்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்தது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டபடி, மகளிருக்கான நாளை, ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேி நாம் கொண்டாடி வருகிறோம். பெண்களுக்கான உரிமையை சமூகத்தின் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும். 

பெண்ணியத்திற்கான போராட்டத்தில் ஆண்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரியான அருணா ராய் தலைமையிலான பெண்கள் அமைப்புகள் தொடர்ச்சியாக போராடியதால் தான் இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது” என்றார்.

நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக மகளிரியல் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.லலிதா வரவேற்றார். துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.பரமேஸ்வரி நன்றி கூறினார். மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com