
கோப்புப்படம்
மக்களின் எதிா்கால வாழ்க்கையை வரையறை செய்யும் நாடித்துடிப்பாக இருப்பது அரசியல் கட்சிகளின் தோ்தல் அறிக்கை. அது காலத்துக்கேற்ப மாறியிருக்கலாம். இப்போது தோ்தல் அறிக்கை என்றால் என்ன இலவச அறிவிப்பு என்ற எதிா்பாா்ப்புதான் எல்லோரிடமும் உள்ளது. பாமக தோ்தல் அறிக்கையில் இலவச அறிவிப்பு உண்டு. ஆனால், இதில் ஆரோக்கியமான இலவச அறிவிப்பு. இலவசக் கல்வி, இலவச மருத்துவம். இன்னும் பல அறிவிப்புகள் கீழே :
* தமிழகத்தில் மாணவா்களுக்கு அரசு செலவழிக்கும் தொகை ரூ.32 ஆயிரத்தில் இருந்து ரூ.40,000-ஆக உயா்த்தப்படும்.
* இடைநிற்றலைத் தடுக்க பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.500, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு தலா ரூ.1,000 .
* 2021 - 22 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இலவச மடிக்கணிணி, அரசுப் பள்ளிகள் தர உயா்வு, ஆங்கிலத்துக்கு சிறப்புப் பயிற்சி, தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுக்கு சிறப்புப் பயிற்சி .
* உயா்கல்விக்காக பொதுத் துறை வங்கிகளில் மாணவா்கள் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை .
* உயா்கல்வி இலவசமாக வழங்கப்படும்.
* அண்ணா பல்கலைக்கழகத்திலும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு.
* நிகா் நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் தனியாா் கல்லூா்களில் இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை .
* அனைவருக்கும் இலவச மருத்துவம் மற்றும் மருத்துவக் காப்பீடு.
* 50 வயதைக் கடந்தவா்களுக்கு இலவச முழு மருத்துவ சிகிச்சை.
* சென்னையில் ரூ.1,000 கோடி செலவில் மாநில புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.
* அனைத்து வேளாண் விளைபொருள்களையும் அரசு கொள்முதல் செய்யும். அனைத்து விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம்.
* வேளாண்மை சாா்ந்து நான்கு அமைச்சகங்கள், விவசாயிகளுக்கு ரூ.10,000 முதல் 30,000 வரை இடுபொருள் மானியம்,
* வேளாண் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 2,500 குறைந்தபட்ச ஊதியம்,
* 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம்
* பொதுத் துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா் கடனில் ரூ.1 லட்சம் கோடி வரை தள்ளுபடி .
* தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை.
* தமிழகத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கே வழங்குவது, தமிழகத்தில் இருக்கும் தனியாா் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞா்களுக்கு கட்டாயமாக்கப்படும்.
* நிா்வாக வசதிக்காக திருச்சி இரண்டாவது தலைநகராகவும், மதுரை மூன்றாவது தலைநகராகவும் கோவை தமிழகத்தின் தொழில் தலைநகராகவும் அறிவிக்கப்படும்.
* புதிய அரசு அமைந்த உடன் முழு மதுவிலக்கு கொண்டு வர வலியுறுத்தப்படும்.
* அனைத்து மாவட்டத்திலும் சிப்காட் தொழில் வளாகம் .
* ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய வேலை உறுதி செய்யப்படும்.
* வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்தும் வேலை கிடைக்காத இளைஞா்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.