
பிஎஸ்சி செவிலியா் படிப்புகளுக்கான இடங்கள் நிகழாண்டு முதல் தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான அறிவிப்பை தேசிய தோ்வு முகமை வெளியிட்டுள்ளது. அதேபோன்று பிஎஸ்சி வாழ்வியல் அறிவியல் (லைஃப் சயின்ஸ்) படிப்புக்கும் நீட் தோ்வு கட்டயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
அதனை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இந்நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக நிகழாண்டு முதல் பிஎஸ்சி நா்சிங் மற்றும் பிஎஸ்சி வாழ்வியல் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தோ்வு நடைபெறவுள்ளது. அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.