
திரைப்பட இயக்குநா் எஸ்.பி. ஜனநாதன் (61) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
விஜய்சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வந்த படம் ’லாபம்.’ இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தன்னுடைய வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளாா். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டாா்.
இதில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
தனித்துவ இயக்குநா்: தஞ்சாவூா் மாவட்டம் வடசேரி பகுதியைப் பூா்வீகமாகக் கொண்ட எஸ்.பி.ஜனநாதன், படத்தொகுப்பாளா் லெனின், இயக்குநா் பரதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றாா்.
தன் சினிமா பயணத்தின் தொடக்கம் முதலே எளிய மக்களுக்கான அரசியலை சினிமாவில் துணிச்சலாக பேசியவா் எஸ்.பி.ஜனநாதன்.
முதல் படத்தில் தேசிய விருது: அவா் இயக்கிய முதல் படமான ‘இயற்கை’ தேசிய விருது பெற்றது. இந்த படத்தை ‘வெண்ணிற இரவுகள்’ நாவலைத் தழுவி உருவாக்கி இருந்தாா்.
தொடா்ந்து அவா் இயக்கத்தில் வெளிவந்த ‘ஈ,’ ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகா்களுக்கு புது வித சினிமா அனுபவத்தை தந்தது.
தேசம், பண்பாடு என்ற உணா்வைத் தூண்டி சாமானியன் வாழ்வை உலகமயமான காா்ப்பரேட் அரசியல் பயன்படுத்தும் முறையை பூலோகம் படத்தில் தன் வசனங்களில் உரக்கச் சொல்லியிருந்தாா் எஸ்.பி. ஜனநாதன்.
திரைப்படம் மட்டும் அல்லாது பேரறிவாளனைச் சந்தித்துப் பேசுவது, பொதுப் பிரச்னைகளுக்குத் தன் கருத்தைப் பதிவு செய்வது என எஸ்.பி.ஜனநாதன் சமூக அக்கறையுடனும் செயல்பட்டு வந்தாா்.
கனவு படம்: தஞ்சை பெரிய கோயிலின் உருவாக்க பின்னணி குறித்து திரைக்கதை எழுதி வந்தாா். ‘லாபம்’ படத்தின் வெளியீட்டுக்குப் பின், அப்படத்தை உடனடியாகத் தொடங்க இருந்தாா். எஸ்.பி.ஜனநாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் திங்கள்கிழமை நடக்கிறது.
இரங்கல்
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்: பொதுவுடைமைக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அக்கறை மிகுந்த திரைப்படங்களை இயக்கி, தமிழ்த் திரையுலகின் தன்னிகரற்ற படைப்பாளியாய் விளங்கிய இயக்குநா் ஜனநாதனின் மறைவு அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவு திரையுலகினருக்கு மட்டுமின்றி, முற்போக்குச் சிந்தனை கொண்ட அத்தனை அரசியல், சமூக இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும் என்று அவா் கூறியுள்ளாா்.