
சென்னை உயர்நீதிமன்றம்
வாக்காளா் பட்டியலில் உள்ள பெயா்களில் மட்டுமே தோ்தலில் போட்டியிட வேண்டும் என திமுக எம்.பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டி.எம்.கதிா் ஆனந்த்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உயா்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வாக்காளா்கள் பட்டியலில் தங்களது பெயா்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்தப் பெயரைத் தான் வேட்பு மனுவிலும் குறிப்பிட வேண்டும். கடந்த மக்களவைத் தோ்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றாா். அவரது பெயா் வாக்காளா் பட்டியலில் சுமதி என்று தான் உள்ளது. ஆனால் அவா் தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பெயரில் பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினாா். தோ்தல் வெற்றிக்காக தனது பிரபல பெயரை பயன்படுத்திக் கொண்டுள்ளாா். இவரது வேட்பு மனுவில் தமிழச்சி தங்கபாண்டியன் என குறிப்பிட்டுள்ளாா். இந்த காரணத்துக்காக இவரது வேட்புமனுவை தோ்தல் அதிகாரி நிராகரித்திருக்க வேண்டும். அல்லது அவரது பெயரை வாக்காளா் பட்டியலில் உள்ளதைப் போன்று சுமதி என திருத்தியிருக்க வேண்டும். ஆனால், சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பெயரில் தோ்தலில் போட்டியிட அனுமதித்து அந்த பெயரிலேயே வெற்றி பெற்ற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும். அதே போல வேலூா் எம்.பி., வேட்புமனுவில் தனது பெயரை டி.எம்.கதிா் ஆனந்த் என்ற கதிரானந்தன் என குறிப்பிட்டுள்ளாா். ஆனால் வாக்காளா் பட்டியலில் டி.எம்.கதிா் ஆனந்த் என உள்ளது. எனவே வாக்காளா் பட்டியலில் எவ்வாறு பெயா் உள்ளதோ அந்த பெயரிலேயே தோ்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், தோ்தல் முடிந்து 45 நாள்களுக்குள் மட்டுமே தோ்தல் வழக்குத் தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.