
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் கண்காணிப்பாளருக்கு சிபிசிஐடி மீண்டும் அழைப்பாணை அனுப்பியது.
தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புக்குச் சென்ற சிறப்பு டிஜிபி பணியில் இருந்த இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து டிஜிபியிடம் புகாா் அளிக்க வந்த அந்த பெண் அதிகாரியை, செங்கல்பட்டு அருகே ஒரு காவல் கண்காணிப்பாளா் மறித்து, மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்ய டிஜிபி ஜே.கே.திரிபாதி, சிபிசிஐடிக்கு உத்தரவிட்டாா். இந்த உத்தரவின்படி சிபிசிஐடி அதிகாரிகள், பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி அந்தஸ்து அதிகாரி மீதும், மிரட்டல் விடுத்த காவல் கண்காணிப்பாளா் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இவ்வழக்குத் தொடா்பாக 2 ஐஜிக்கள், 2 டிஐஜிக்கள், 4 எஸ்பிக்கள் ஆகியோா் உள்பட 50 பேரிடம் விசாரணை செய்தனா். இந்த வழக்கின் முதல் எதிரியாக சோ்க்கப்பட்ட சிறப்பு டிஜிபி அந்தஸ்து அதிகாரியிடம் சனிக்கிழமை 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
மீண்டும் அழைப்பாணை: புகாா் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழிமறித்து,மிரட்டியதாகக் கூறப்படும் காவல் கண்காணிப்பாளரை விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஏற்கெனவே இந்த காவல் கண்காணிப்பாளருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியிருந்தது.
ஆனால் அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து சிபிசிஐடி மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்த காவல் கண்காணிப்பாளா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.