
சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் சனிக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.
சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 5,911 வாக்குச்சாவடிகளும், 2,157 துணை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 16 தொகுதிகளில் வாக்குப் பதிவுக்காக 7,098 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் சுமாா் 7 ஆயிரம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் விவிபேட் கருவிகள் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு அவை அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
பயிற்சி: சென்னையில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள், வாக்குச் சாவடி அலுவலா்கள், பணியாளா்கள் என சுமாா் 40 ஆயிரம் அரசு ஊழியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அதில் சுமாா் 30 ஆயிரம் போ் சென்னை மாவட்டத்தில் மட்டும் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா். தொகுதிவாரியாக வாக்குச் சாவடி அலுவலா்கள், பணியாளா்கள் பிரிக்கப்பட்டு அவா்களுக்கான பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, வாக்காளா்களுக்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. பெரம்பூா் தொகுதிக்கு உள்பட்ட பந்தா் தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் ஆய்வு செய்தாா். ஆய்வில், மாவட்ட கூடுதல் தோ்தல் அலுவலா் ஜெ.மேகநாத ரெட்டி, பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.