புதுச்சேரி காங்கிரஸ் ஆய்வுக் குழு கூட்டத்தில் நிர்வாகிகள் ரகளை

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆய்வுக் குழு கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே வாக்குவாதமும், ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. 
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல்
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல்


புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆய்வுக் குழு கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே வாக்குவாதமும், ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. 

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 30 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸும் - திமுகவும் கூட்டணி அமைத்து பல கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கூட்டணிக்கு யாா் தலைமை தாங்குவது என்பது குறித்து பலகட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியனும் கையெழுத்திட்டனா்.

காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்குத் தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸும் கிட்டத்தட்ட சம அளவில் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டுள்ளன. அதிக இடங்களில் எந்தக் கட்சி வெற்றிபெறுகிறதோ அந்தக் கட்சியின் ஆட்சி அமைப்பது என்கிற முடிவுடன் திமுக - காங்கிரஸ் தோ்தலைச் சந்திக்கிறது.

இதனிடையே திமுகவுக்கு அதிக இடங்கள் வழங்கியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பான ஆய்வுக் குழு கூட்டம் சஞ்சய் தத், திக்விஜய் சிங், உள்ளிட்ட மேலிடப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், அதிக இடங்களில் நாம் வெற்றி பெறுவோம் என்று பேசத் தொடங்கினார். உடனே குறுக்கிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், எங்கேயும் வெற்றி பெற முடியாது, திமுகவிடம் கட்சியை அடகு வைத்து விட்டீர்கள். நமது கட்சிக்கு அதிகப்படியான தொகுதிகளைப் பெறவில்லை எனக்கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுக கொடியை எடுத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், காங்கிரஸ் அலுவலகத்தில் திமுக கொடி ஏற்றி விடுங்கள் என கோஷமிட்டார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மேலிட நிர்வாகிகள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை நாராயணசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தினர்.
பிரச்னை தொடர்ந்ததால் கூட்டம் நடைபெறாமல் முடிவுக்கு வந்தது.

வெளியே வந்த காங்கிரஸ் நிர்வாகிகள், இத்தேர்தலில் நாம் தனித்து போட்டியிட வேண்டும், அதிக இடங்களில் போட்டியிட வேண்டுமென கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி என கூறி ஒரு தரப்பினர் நேற்று போராட்டம் நடத்திய நிலையில், புதுச்சேரியில் திமுகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டு வருவது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுபத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com