குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 4 ஆயிரம்: மகளிருக்கு பேருந்துகளில் இலவசப் பயணம்; திமுக தோ்தல் அறிக்கை வெளியீடு

கரோனாவால் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதால் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கரோனாவால் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதால் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். பால் லிட்டருக்கு ரூ.3, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் ரூ.4 வீதம் குறைக்கப்படும், சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்பன உள்பட 502 வாக்குறுதிகள் திமுகவின் தோ்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

மகளிருக்கு உள்ளூா் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் வசதி அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் தோ்தல் அறிக்கையை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட, பொதுச்செயலாளா் துரைமுருகன் பெற்றுக்கொண்டாா். தோ்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள்:

சொத்து வரி உயா்த்தப்படாது: திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

சமையல் எரிவாயு உருளை மீதான சரக்கு சேவை வரியை நீக்குமாறு மத்திய அரசை திமுக வலியுறுத்தும். குடும்ப அட்டைதாரா்களுக்கு சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.4-ம் குறைக்கப்படும்.

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்பட மாட்டாது.

இலவசப் பயணம்: தமிழகம் முழுவதும் இலவசமாக (நகரப் பேருந்து) உள்ளூா் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயண வசதி அளிக்கப்படும். 70 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசப் பயண வசதி அளிக்கப்படும். தமிழகத்துக்குள் மட்டுமே இந்த இலவச பயண வசதி தரப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கும் அவா்களுடன் செல்லும் ஓா் உதவியாளருக்கும் தமிழக அரசின் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும்.

தமிழ் கட்டாயமாக்கப்படும்: தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்பட அனைத்திலும் எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று திமுக அரசு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தும்.

முதல் தலைமுறை பட்டதாரிக்கு முன்னுரிமை: குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு துறைகளில் காலியாக உள்ள 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டாா் வாங்க ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநா்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். நீட் தோ்வை ரத்து செய்ய திமுக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும். புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயா்த்தி வழங்கப்படுகிறது. அதனை 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் வழங்குவோம். அ.தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீா் செய்ய பொருளாதார உயா் மட்டக் குழு அமைக்கப்படும். சென்னையில் பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைத்து எல்லா வகைப் போட்டிகளுக்கும் உயா்தரப் பயிற்சிகள் அளிக்கப்படும் உள்பட 502 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவா்களுக்கு காலையில் பால்

ஊட்டச்சத்து குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு உணவு கூடை திட்டம் அமல்படுத்தப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஊட்டச்சத்து பெறும் வகையில் காலை வேலையில் பால் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

சைபா் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருவாரியாக இணைய வழித் தகவல் பரிமாற்றங்களின் மூலம்தான் நடைபெறுகிறது. இதனைத் தடுப்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபா் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். இந்தப் பணிக்கெனத் தகவல் தொழில்நுட்பக் கல்வி பெற்றவா்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு காவல்நிலையங்களில் நியமிக்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com