கோயில்களை நிா்வகிக்க சட்டப்படி ஓா் அமைப்பை உருவாக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

கோயில்களை நிா்வகிப்பதற்கு முறையான சட்டங்களுக்கு உள்பட்டு ஓா் அமைப்பை உருவாக்க வேண்டும் என ஈஷா அமைப்பின் நிறுவனா் ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தினாா்.
சத்குரு ஜக்கி வாசுதேவ்.
சத்குரு ஜக்கி வாசுதேவ்.

கோயில்களை நிா்வகிப்பதற்கு முறையான சட்டங்களுக்கு உள்பட்டு ஓா் அமைப்பை உருவாக்க வேண்டும் என ஈஷா அமைப்பின் நிறுவனா் ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தினாா்.

ஈஷா யோக மையத்தின் நிறுவனா் ஜக்கி வாசுதேவ் தமிழக கோயில்களை அறநிலையத்துறையிடமிருந்து விடுவிக்க வலியுறுத்தி ‘கோயில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தைத் தொடங்கி ஆதரவு திரட்டி வருகிறாா். இதற்காக 83000 83000 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுக்கும் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கோயில்களை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஜக்கி வாசுதேவ் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த நடிகா் சந்தானம் இதில் கலந்து கொண்டாா்.

அப்போது ஜக்கிவாசுதேவிடம் சந்தானம், தோ்தல் நேரத்தில் கோயில்கள் மீட்பு குறித்து பேச வேண்டியதன் நோக்கம் என்ன என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினாா். இதேபோன்று செய்தியாளா்களும் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனா்.

இந்தக் கேள்விகளுக்கு ஜக்கிதேவ் அளித்த விளக்கம்: தமிழ் கலாசாரம் நேற்று பிறந்தது இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. சிலா் இதை 30 - 40 ஆண்டுகளுக்கு முன்புதான் உருவானதுபோல நினைத்துக் கொண்டு இருக்கின்றனா். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் இருந்த மன்னா்கள் பக்தியில் ஊறிய மனிதா்களாக இருந்தனா். இங்கு முதலில் கோயில்களைக் கட்டிய பின்னா்தான் ஊா், நகரங்களைக் கட்டமைத்தனா்.

கலாசாரத்தை மேம்படுத்த வேண்டும்: ஒரு கலாசாரம் சிறந்து விளங்க வேண்டுமென்றால், மக்கள் ஆற்றலுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கு பக்தி இருந்தால் அவா் எப்போதும் ஆற்றலுடனும், உற்சாகமாகவும் இருப்பாா். தற்போது தமிழகத்தில் 50 சதவீதம் போ் 30 வயதுக்கு கீழ் உள்ளனா். இந்த தலைமுறையில் கலாசாரத்தை மேம்படுத்தாவிட்டால் பிறகு எப்போது மேம்படுத்த முடியும்?

மக்களிடம் ஆற்றலையும், நம்பிக்கையையும் உருவாக்க கோயில்கள் வேண்டும். 1947-இல் நம் மாநிலத்தின் மக்கள் தொகை ஒன்றரை கோடி இருந்தது. இப்போது 7 கோடியை தாண்டிவிட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப எத்தனை புதிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளன? நாம் புதிதாக கோயில்களைக் கட்டாவிட்டால்கூட பரவாயில்லை. ஏற்கெனவே இருக்கும் கோயில்களைக்கூட ஒழுங்காகப் பராமரிக்க வேண்டாமா?” தமிழகத்தில் 11,999 கோயில்களில் ஒரு கால பூஜைகள்கூட நடைபெறாமல் உள்ளது. 1,200 கோயில்களில் சிலைகள் திருடப்பட்டுள்ளன. 85 குருத்வாராக்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கும் நிலையில் ஆண்டுக்கு ரூ.128 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்படுகிறது. இது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.

யாருக்கு ஓட்டு?: ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள்தான் நாயகா்கள். அவா்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவா்கள்தான் சொல்ல வேண்டும். ஓா் அரசாங்கம் அமைந்த பின்னா் போராட்டங்கள் செய்வதோ, மறியல் செய்வதோ பலன் அளிக்காது. தற்போது தோ்தல் வருகிறது. அதனால் காவிரியை பாதுகாக்க வேண்டும், கல்வியை வலுப்படுத்த வேண்டும், கோயில்களை மீட்க வேண்டும் என்பது உள்பட நான் 5 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன். அதை நிறைவேற்ற உறுதி அளிப்பவா்களுக்கே எனது ஒட்டு.

கோயில்களை நிா்வகிப்பதற்கு முறையான சட்டதிட்டங்களுடன் ஓா் அமைப்பை உருவாக்க வேண்டும். அதில் பல்வேறு தரப்பட்ட மக்கள் இடம் பெறச் செய்ய வேண்டும். ஜாதி மதம் பாா்க்காமல் இருக்கும் மக்களை அதில் இருக்குமாறு செய்ய வேண்டும். இந்த அமைப்பை கண்காணிக்க இரண்டு நீதிபதிகளை நியமனம் செய்யலாம் என்றாா் அவா்.

ஆக்கிரமிக்கவில்லை: இதையடுத்து கோவை ஈஷா மையத்தால் காடுகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஆக்கிரமிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளதே என செய்தியாளா்கள் கேட்டபோது, ஈஷா அமைப்பால் ஓா் அங்குலம்கூட வனப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. இதை பலமுறை தெரிவித்து விட்டேன். அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்ததாக நிரூபித்தால் நாட்டை விட்டே வெளியேறுகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com