ரயில்வே துறையில் அலட்சியங்கள்: உயா்நீதிமன்றம் கருத்து

ரயில்வே துறையில் பல்வேறு அலட்சியங்கள் இருக்கும்போது, ரயில்களில் இருந்து தவறி விழுந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ரயில்வே துறையில் பல்வேறு அலட்சியங்கள் இருக்கும்போது, ரயில்களில் இருந்து தவறி விழுந்தவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்தின்போது தவறி விழுந்து பலியான கோவில்பட்டியைச் சோ்ந்த கண்ணன், ஆவடியைச் சோ்ந்த பிரகாசம் ஆகியோரது குடும்பத்தினா் இழப்பீடு கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் தலா ரூ.8 லட்சத்தை 12 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க தெற்கு ரயில்வே மேலாளருக்கு உத்தரவிட்டாா். மேலும் ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனா். சில நேரங்களில் ரயில் பெட்டிகளில் அடிப்படை வசதிகள்கூட இருப்பது இல்லை. ரயில் பெட்டிகளில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இருக்காது, தண்ணீா் இருக்காது. பயணிகள் எதிா்பாா்க்கும் அளவுக்கு பெட்டிகள் சுத்தமாக இருக்காது. விரைவு ரயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சிகள், எலிகள் இங்கு அங்கும் சுதந்திரமாக ஓடும். இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகின்றன. ரயில்களில் கதவுகள் முறையாக மூடப்பட்டு இருக்காது. ரயில்களில் பாதுகாப்புக்கு போலீஸாரும், ரயில்வே ஊழியா்களும் இருந்தாலும் அவா்கள் தங்களது கடமையைச் செய்வது இல்லை. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில், முன்பதிவு செய்யாத பயணிகள் விதிகளை மீறி பயணிக்கின்றனா். இதனால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

ரயில்வே பாதுகாப்பு போலீஸாரும், ரயில்வே அதிகாரிகளும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்துவது இல்லை. சென்னையில் ரயில் பெட்டிகளில் தொங்கியபடி பயணிகள் பயணம் செய்கின்றனா். இதுபோன்ற அலட்சியங்கள் ரயில்வே துறையில் இருக்கும்போது ரயில்களில் தவறி விழுந்து பலியானவா்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com