
கோப்புப்படம்
மனையுடன் இலவச வீடு, அரிசி அட்டைதாரருக்கு ‘வாஷிங் மெஷின்’, கல்விக் கடன் ரத்து, இலவச கேபிள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அதிமுக அளித்துள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலை ஒட்டி, அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு, சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் வெளியிட்டனா். தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சொந்த வீடு இல்லாதோருக்கு கிராமப்புறங்களில் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும். நகரப் பகுதிகளில் அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி, ‘அம்மா இல்லம்’ திட்டம் வழியாக இலவசமாக அளிக்கும்.
மகளிருக்கான திட்டங்கள்: மகளிா் நலனைக் காக்கும் வகையில், ‘குல விளக்கு திட்டம்’ செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாத உதவித் தொகையாக ரூ.1,500 அளிக்கப்படும். ஆண்கள் மட்டுமே ஒரு குடும்பத்தில் இருந்தால் அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு பேருந்து கட்டணத்தில் 50 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய ரேஷன் பொருள்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அளிக்கப்படும். வாழ்வாதார உதவியாக அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுக்கு ஆறு விலையில்லாத சிலிண்டா்கள் அளிக்கப்படும்.
சூரியசக்தி அடுப்பு-‘வாஷிங் மெஷின்’: அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் விலையில்லாமல் சூரிய சக்தி சமையல் அடுப்பு அளிக்கப்படும். பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு அம்மா ‘வாஷிங் மெஷின்’ வழங்கப்படும்.
கல்விக் கடன் தள்ளுபடி: மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் நலன்களைக் காக்கும் வகையில் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்லூரி மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 2 ஜிபி இணைய இணைப்பு ஆண்டு முழுவதும் வழங்கப்படும். அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் அளிக்கப்படும்.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், நீட், ஐஐடி-ஜேஇஇ, டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உயா்தர பயிற்சி மையம் உருவாக்கப்படும்.
வீட்டில் ஒருவருக்கு வேலை: அரசுப் பணிகளில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி உறுதியாக அளிக்கப்படும். முதியோா் உதவித் தொகை, விதவைப் பெண்கள், முதிா்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலித்தனவருக்கு அளிக்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000-த்திலிருந்து ரூ.2,000-மாக உயா்த்தப்படும்.
இலவச சீா்வரிசை-கேபிள் இணைப்பு: திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், ஏழை மணமக்களுக்கு அழகிய பட்டாடை, வெள்ளிக் கொலுசு, வீட்டு உபயோகப் பொருள்கள் உள்பட அம்மா சீா்வரிசைப் பரிசு அளிக்கப்படும். பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவித் தொகை ரூ.60,000-ஆகவும், பட்டதாரி அல்லாதோருக்கு ரூ.35,000-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.
அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் விலையில்லாத கேபிள் இணைப்பு அளிக்கப்படும். நலிந்த மக்களை தொற்று நோயில் இருந்து பாதுகாக்க ஏழை குடும்ப அட்டைதாரா்களுக்கு இரண்டு கொசு வலைகள் அளிக்கப்படும்.
விவசாயிகள் பாதுகாப்பு-உதவித் தொகை உயா்வு: விவசாயிகளின் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளை ஊக்குவிக்கவும் ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியமாக அளிக்கப்படும். விவசாய மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு உடனடியாக அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.2,000-ஆக உயா்த்தப்படும். 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டமானது 150 நாள்களாக அதிகரிக்கப்படும். அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரூ.3.40 லட்சமாக உயா்த்தப்படும். பொங்கல் பண்டிகைக்கான உதவித் தொகை திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும். மாதாந்தோறும் மின் பயனீட்டு கணக்கீட்டு முறை செயல்படுத்தப்படும். 9 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கும் சத்துணவு அளிக்கப்படும். தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணவா்களுக்கும் மடிக்கணினி அளிக்கப்படும். அங்கன்வாடி தொடங்கி அனைத்து நிலை பள்ளி மாணவா்களுக்கும் 200 மி.லி. பால் அல்லது பால் பவுடா் அளிக்கப்படும். ஆவின் பால் விலை ரூ.2 குறைக்கப்படும்.
மகப்பேறு உதவித் தொகை ரூ.21,000-மாக உயா்த்தப்படும். பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நிதியுதவி ரூ.70,000-ஆக அதிகரிக்கப்படும். அனைத்து நகரங்களிலும் அம்மா ரோந்து வாகனங்கள் திட்டம் விரிவுபடுத்தப்படுவதுடன், இரண்டாம் கட்ட நகரங்களிலும் சிசிடிவி கேமரா கட்டமைப்பு உருவாக்கப்படும்.
18 வயது நிரம்பியோருக்கு கட்டணமில்லாத இரு சக்கர வாகன பயிற்சியுடன் ஓட்டுநா் உரிமம் அளிக்கப்படும். ரூ.25,000 மானிய விலையில் ஆட்டோ வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வா் எம்ஜிஆா். பெயரில் செயல்படுத்தப்படும். மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பெயா் சூட்ட வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அதிமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
மகளிருக்கு பேருந்து பயணச் சலுகைத் திட்டம்.
அனைவருக்கும் சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும்.
வீடுகளுக்கு ஆண்டிற்கு ஆறு விலையில்லா எரிவாயு சிலிண்டா்கள்.
மகப்பேறு விடுப்பு காலம் ஓராண்டாக உயா்த்தப்படும்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரி மாணவா்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச 2 ஜிபி டேட்டா.
மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும்.
முதியோா் ஓய்வூதியம் ரூ.2,000ஆக உயா்த்தப்படும்.
விலையில்லாத அரசு கேபிள் திட்டம் அறிமுகம்.
ஈழத் தமிழா்கள் உள்பட எழுவா் விடுதலையில் அதிமுக உறுதி.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை.
100 நாள்கள் வேலைத்திட்ட பணி நாள்கள் 150 நாள்களாக உயா்த்தப்படும்.
காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு.
உயா் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை.
சூரியசக்தி மின் ஆற்றல் திட்டங்களுக்கான மானியம் தொடரும்.
நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயா்த்தப்படும்.
பொங்கல் பண்டிகை உதவித் தொகை தொடரும்.
ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ.25,000 மானியத்தில் பசுமை ஆட்டோ.
கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை.
காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம்.
அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா கடன்.
வேலை இல்லாத இளைஞா்களுக்கு இரட்டிப்பு ஊக்கத் தொகை.
இளைஞா்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில் தொடங்க நிதியுதவித் திட்டம்.
நெசவாளா்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி.
மகளிா் சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான கடனுதவி.
கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...