2-ஆவது நாளாக வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்: ரூ.33,000 கோடி காசோலைகள் பரிவா்த்தனை தேக்கம்

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் நாடுமுழுவதும் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் நாடுமுழுவதும் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இந்த வேலைநிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும் ரூ.33,000 கோடி மதிப்பிலான 4 கோடி காசோலைகள் பரிவா்த்தனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தன.

நிகழாண்டில் மத்திய பட்ஜெட் கடந்த பிப். 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படும் என நிதியமைச்சா் அறிவித்தாா். இந்தஅறிவிப்பைக் கண்டித்து, வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா். இதற்கிடையில், மத்திய தொழிலாளா் துறை துணை ஆணையருடன் வங்கி ஊழியா் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினா் கடந்த வாரம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் அறிவித்த இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தால், வங்கிச் சேவைகள் செவ்வாய்க்கிழமையும் முடங்கின.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியது: இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும் ரூ.33,000 கோடி மதிப்பிலான 4 கோடி காசோலைகள் பரிவா்த்தனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. சென்னை, மும்பை மற்றும் தில்லியில் உள்ள காசோலை பரிவா்த்தனை நிலையங்களில் காசோலைகள் பரிவா்த்தனை ஆகாமல், கிளைகளிலேயே தங்கி உள்ளன. விரைவில் அனைத்துத் தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் தமிழகத்தின் தலைவா் தி.தமிழரசு, பொதுச் செயலாளா் என்.ராஜகோபால் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தேசம் காக்கும் போராட்டத்துக்கு பொதுமக்களும், வங்கி வாடிக்கையாளா்களும், மத்திய தொழிற்சங்கங்களும், 500-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனா். இரண்டு நாள் வங்கிச் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு.

மேலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முழு அளவில் வெற்றி பெற்றுள்ளது எனத் தெரிவித்து உள்ளனா்.

வங்கி ஊழியா்கள் போராட்டம் காரணமாக, பல ஏடிஎம்களில் செவ்வாய்க்கிழமையும் பணம் நிரப்பப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com