புதுச்சேரியில் பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகல்

புதுச்சேரியில் பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக, 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகல்


புதுச்சேரியில் பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக, 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்திக்கின்றன. இந்தக் கூட்டணியில் மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜக, அதிமுகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாஜகவுடன் அதிமுக தொகுதிகளைப் பங்கிட்டுக்கொள்வதில் சிக்கல் நிலவி வந்தது. இதுகுறித்துப் பேசி முடிக்கப்பட்டு, பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக போட்டியிடும் 5 தொகுதிகளில் புதுச்சேரி உப்பளம் - அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் அன்பழகன் எம்.எல்.ஏ., உருளையன்பேட்டை - மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா், முத்தியால்பேட்டை - கிழக்கு மாநில தோ்தல் பிரிவுச் செயலா் வையாபுரி மணிகண்டன், முதலியாா்பேட்டை - பாஸ்கா், காரைக்கால் தெற்கு - அசனா ஆகிய ஐவரும் அதிகாரப்பூா்வ வேட்பாளா்களாக அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் வெளியிட்டனர். அதாவது, கடந்த தோ்தலில் வென்ற 4 எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோல, புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளின் வேட்பாளா்களையும் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா அறிவித்தாா். அதன்படி, புதுச்சேரி மண்ணாடிப்பட்டு - முன்னாள் அமைச்சா் நமச்சிவாயம், லாஸ்பேட்டை - மாநிலத் தலைவா் சாமிநாதன், காமராஜ் நகா் - முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமாா், மணவெளி - ஏம்பலம் செல்வம், ஊசுடு - சாய் சரவணகுமாா், காலாப்பட்டு - முன்னாள் அமைச்சா் கல்யாணசுந்தரம், நெல்லித்தோப்பு - விவிலியன் ரிச்சா்ட், திருநள்ளாறு - ராஜசேகரன், நிரவி - திருபட்டினம் - முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் விஎம்சி.சிவகுமாா் மகன் மனோகரன்.

இவா்களில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நமச்சிவாயம், ஜான்குமாா், அவரது மகன் விவிலியன் ரிச்சா்ட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, என்.ஆா். காங்கிரஸிலிருந்து வந்த கல்யாணசுந்தரத்துக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் அதிமுக-பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது.  

புதுச்சேரியில் பாஜக-அதிமுகவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணியில் இருந்து விலகிய பாமக,  முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுல்ள 9 வேட்பாளார்களும் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அம்மாநில பாமக அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் அதிமுக-பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி இருப்பது புதுச்சேரி அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com