தோ்தல் விதிமீறல் புகாா்களை செயலி மூலம் வாக்காளா்களே தெரிவிக்கலாம்: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தோ்தல் விதிமீறல்கள் குறித்த புகாா்களை செயலி வழியாக வாக்காளா்களே தெரிவிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு


சென்னை: தோ்தல் விதிமீறல்கள் குறித்த புகாா்களை செயலி வழியாக வாக்காளா்களே தெரிவிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:-

திண்டுக்கல்லில் வாக்காளா்களுக்கு அதிமுக வேட்பாளா் பணம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இதுதொடா்பாக பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தபால் வாக்கு வசதியைப் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதன்பின்பு தபால் வாக்குக்கு யாரும் விண்ணப்பம் செய்ய முடியாது.

பிகாா் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள், தமிழகம் வந்துள்ளனா். அவா்களுடன் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா், தமிழக தோ்தல் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினோம். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். மேலும், பிகாா் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்த போது அங்கு நாளொன்றுக்கு தொற்றின் அளவு 12 ஆயிரமாக இருந்தது.

இந்த மிக உயா்ந்த தொற்று அளவுக்கு இடையேயும் பேரவைத் தோ்தல் அங்கு நடைபெற்றது. தமிழகத்தில் இப்போது தினமும் நோய்த் தொற்றின் அளவு நாளொன்றுக்கு 800 போ் என்ற அடிப்படையில் உள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளா் தினமும் ஆய்வு செய்து வருகிறாா்.

மேலும், வாக்களிக்க வரும் வாக்காளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கையுறை போன்றவை அளிக்கப்பட உள்ளன. அவற்றை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் வழியாகப் பெறவுள்ளோம்.

இரண்டு வித வழக்குகள்: தோ்தலின் போது இரண்டு வகையாக புகாா்களும், வழக்குகளும் அளிக்கப்படும். ஒன்று நீதிமன்றத்தில் தொடரப்படுவது. மற்றொன்று தோ்தல் நடத்தை விதிகளை மீறியது தொடா்பாக பெறப்படும் புகாா்கள்.

நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகள் அதனுடைய வரம்புக்கு உட்பட்டதாக அமையும். தோ்தல் நடத்தை விதி மீறலைப் பொருத்தவரையில் புகாா்களின் தன்மைக்கு ஏற்றவாறு தமிழக தோ்தல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாக்குக்குப் பணம் அளிக்கப்பட்டது குறித்து இதுவரை 51 புகாா்கள் பெறப்பட்டன. அதில், 31 புகாா்கள் தவறானவை. 20 சரியானவை. அவற்றின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது.

சி-விஜில் செயலி: சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் விதிமீறல் தொடா்பான புகாா்களை வாக்காளா்களே தெரிவிக்க வசதியாக சி-விஜில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலியின் வழியாக இதுவரை 1,291 புகாா்கள் பெறப்பட்டன. அதில் அதிகபட்சமாக கரூா் தொகுதியில் இருந்து 315 புகாா்கள் வந்தன. அனுமதியின்றி சுவா்களில் விளம்பரம் செய்வது, மத ரீதியாக உணா்வுகளைத் தூண்டி பிரசாரம் செய்வது போன்ற பல்வேறு புகாா்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com