கூத்தாநல்லூர்: மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் மருத்துவ முகாம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பயிற்சியாளருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் மருத்துவர் அஷ்ரப் அலி.
பயிற்சியாளருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் மருத்துவர் அஷ்ரப் அலி.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட பனங்காட்டாங்குடி தமிழர் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில், தமிழக அரசின் அங்கீகாரத்துடன் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 6 முதல் 14 வயது வாயிலானவர்கள் பனங்காட்டாங்குடி,14 வயதுக்கு மேற்பட்டவர்கள் குடிதாங்கிச்சேரி என இரண்டு பிரிவுகளாகச் செயல்படுகிறது. 

இப்பள்ளியின் நிறுவனர் ப.முருகையன், அவரது மனைவியும் அரசுப் பள்ளி ஆசிரியையுமான மகேஸ்வரி முருகையன் ஆகியோர் கவனித்து வருகின்றனர். கடந்த ஆண்டு உருவான கரோனா தொற்று, முடிவுக்கு வராமல், மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மனோலயம் மன வளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் அஷ்ரப் அலி, மருத்துவப் பரிசோதனை செய்தார். 

மாணவர்களுக்கும், பள்ளியின் பயிற்சியாளர்கள், ஆயாம்மா உள்ளிட்ட அனைவருக்கும், சளி, காய்ச்சல், காயங்கள் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் பரிசோதித்தார். தொடர்ந்து, மருந்து, மாத்திரைகளையும் வழங்கி ஆலோசனைகளை வழங்கினார். மருத்துவப் பரிசோதனையில், பயிற்சியாளர்கள் சுரேஷ், வினோத், அனுராதா, செளமியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதுகுறித்து, நிறுவனர் முருகையன் கூறியது, 

மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பயிற்சிப் பள்ளி கடந்த 2003ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி, 6 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், மரக்கடை கீழத் தெருவில் வாடகைக் கட்டடத்தில் இயங்கியது. அதன் பிறகு 2010ஆம் ஆண்டு புருனை தொழிலதிபர் டி.எம். பதுருதீன், சமூக ஆர்வலர் டி.ஏ.நிஜாமுதீன் ஆகியோரின் நிதியுதவி மற்றும் தமிழக அரசின் மானிய உதவியுடன் மேலப்பனங்காட்டாங்குடி, தமிழர் தெருவில் சொந்தக் கட்டடத்தில் கட்டப்பட்டு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் மா.சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது. 

தற்போது, இப்பள்ளி  மாநில மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் அங்கீகாரத்துடன் 75 மாற்றுத்திறன் குழந்தைகள் தங்கியுள்ள பள்ளியாக இயங்கி வருகிறது. இக்குழந்தைகளுக்குக் கல்வி, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்தும் இலவசச் சேவையாகவே மனோலயம் நிர்வாகம் வழங்கி வருகின்றது. இங்குள்ள குழந்தைகளுக்கு, கல்வியுடன், கூடைப் பின்னுதல், சாக்பீஸ், மெழுகுவர்த்தி, சாம்பிராணி, சணல் பை போன்ற கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

14 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் குடிதாங்கிச்சேரி வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவக் குழுவினர்கள் நேரில் பார்வையிட்டு, மருத்துவ பரிசோதனையும், கரோனா பரிசோதனையும் செய்து வருகிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com