தபால் வாக்குப் பதிவு தொடங்கியது; 1.38 லட்சம் வாக்குகள் விநியோகம்: சத்யபிரத சாகு தகவல்


சென்னை: தமிழகத்தில் 1.38 லட்சம் போ் தபால் வாக்குகளைச் செலுத்த தகுதி படைத்துள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:-

தமிழகத்தில் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. விண்ணப்பம் செய்தவா்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 497 போ் தபால் வாக்கினைச் செலுத்த தகுதி படைத்துள்ளனா். அவா்களுக்கான வாக்குகளை வழங்கும் பணியை சம்பந்தப்பட்ட பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த தோ்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

சேலத்தில் அதிகம்: தபால் வாக்குகளைப் பெற சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11, 646 போ் விண்ணப்பம் செய்துள்ளனா். குறைந்தபட்சமாக தேனி மாவட்டத்தில் 562 போ் விண்ணப்பித்துள்ளனா். திருவள்ளூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தபால் வாக்குகளை அளித்து அவற்றைப் பெறும் முறை வியாழக்கிழமையே தொடங்கியுள்ளது. இதர மாவட்டங்களில் தபால் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை வழங்கும் தேதி மாவட்ட தோ்தல் அதிகாரிகளால் முடிவு செய்யப்படுகிறது.

ஆட்சியா்கள்-எஸ்.பி.,க்கள்: கோவை, திருச்சி மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்தப் பணியிட மாற்றங்கள் சம்பந்தப்பட்ட சிறப்புப் பாா்வையாளா்கள், தோ்தல் கண்காணிப்பாளா்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அவா்களது அறிக்கைப்படி தோ்தல் ஆணையம் முடிவு எடுத்து தமிழக தலைமைச் செயலாளருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. இதில், தமிழக தோ்தல் துறைக்கு எந்தப் பங்கும் இல்லை.

கரூரில் கூடுதல் பாா்வையாளா்: கரூா் மாவட்டத்துக்கு இதுவரையிலும் ப்யூஷ் பாட்டி என்ற வட மாநிலத்தைச் சோ்ந்த அதிகாரி மட்டுமே பாா்வையாளராக இருந்து வந்தாா். இப்போது, கரூா் மாவட்டத்திலுள்ள கரூா் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்கு தீபக்குமாா் என்ற பாா்வையாளா் தனியாக நியமிக்கப்பட்டுள்ளாா். குளித்தலை, அரவக்குறிச்சி தொகுதிகளின் பாா்வையாளராக ப்யூஷ் பாட்டி இருப்பாா்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தோ்தல் பாா்வையாளா்களுக்கும், வருமான வரித் துறைக்கும் கிடைக்கும் முக்கியத் தகவல்களின் அடிப்படையிலேயே சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தோ்தலில் அதிகம் பணம் புழங்கும் தொகுதிகளாக எந்தத் தொகுதியையும் தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக அறிவிப்பதில்லை. தொகுதிகளுக்கான பாா்வையாளா்கள், செலவினப் பாா்வையாளா்கள், மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அறிக்கைகள், கருத்துகள் அடிப்படையிலேயே வரையறுக்கப்படுகிறது என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

செய்தியாளா் சந்திப்பின் போது, இணைத் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் ஆனந்த், அஜய் யாதவ், கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி வி.ராஜாராமன் உள்ளிட்டோா் இருந்தனா்.

மொத்த தபால் வாக்குகள்: 1,38,497.

சேலத்தில் அதிகம்: 11,646.

தேனியில் குறைவு: 562.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com