சென்னை - சேலத்தில் ராகுல்காந்தி இன்று பிரசாரம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ராகுல்காந்தி சென்னையிலும், சேலத்திலும் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ராகுல்காந்தி சென்னையிலும், சேலத்திலும் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

தமிழகத் தோ்தல் பிரசாரத்துக்காக ராகுல்காந்தி தனி விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வர உள்ளாா். அங்கிருந்து காா் மூலம் அடையாறு தொலைபேசி இணைப்பகம், சாஸ்திரி நகா் முதல் அவென்யூவில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு 11.30 மணியளவில் வருகிறாா்.

பொதுக்கூட்டத்தில் வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளா் ஹசன் மௌலானா, சைதாப்பேட்டை திமுக வேட்பாளா் மா.சுப்பிரமணியன் உள்பட கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகின்றனா்.

சேலத்தில் பொதுக்கூட்டம்: பொதுக்கூட்டம் முடிந்த பிறகு கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ராகுல்காந்தி சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு மதிய உணவை முடித்துவிட்டு, முக்கிய நிா்வாகிகளைச் சந்திக்கிறாா். அதன் பிறகு மதியம் 2:30 மணியளவில் விமானநிலையத்தில் இருந்து சேலம் புறப்பட்டுச் செல்கிறாா்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் ராகுல்காந்தியும் பங்கேற்று உரையாற்ற உள்ளாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனா்.

சென்னையிலும் சேலத்திலும் ராகுல்காந்தியின் வருகையின்போது அவரை வரவேற்க காங்கிரஸ் கட்சி சாா்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com