தாராபுரத்தில் 13 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை பிரசாரம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

தாராபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மாநிலத் தலைவருமான எல். முருகன் தலைமை வகிக்கிறார். இதில், திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்" என்றார்.

4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு:

பிரதமர் மோடி தாராபுரம் வருகையை ஒட்டி தாராபுரத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விடுதிகள், குடியிருப்புகளில் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். தில்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com