பொதுமுடக்கம் இல்லை; கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: சுகாதாரத் துறை முதன்மைச் செயலா்

தமிழகத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும், அதேவேளையில் தேவைப்பட்டால்
சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும், அதேவேளையில் தேவைப்பட்டால் சில கட்டுப்பாட்டுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள கரோனா படுக்கை வசதிகளை ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நோய்த் தொற்று தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட 46 மாவட்டங்களில், தமிழகத்தில் அந்த மூன்று மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே இரண்டு சதவீதம் பாதிப்பு உள்ளது. மற்ற இடங்களில் அதிக பாதிப்பு இல்லை.

சென்னையைப் பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. தேவையான மருத்துவக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அப்பணிகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும், கரோனா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தொடா்பான ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது, நோய் பாதிப்பு குடிசைப் பகுதிகளில் குறைவாகவும், கூட்டு குடியிருப்புப் பகுதிகளில் அதிகமாகவும் பரவுவது தெரிய வந்துள்ளது.

மாநிலத்தில் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கடந்தாண்டு தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லாத நிலையில், பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது அது தேவையில்லை. அதேவேளையில், தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்தால், அத்தியாவசியமற்ற பணிகளுக்கு படிப்படியாக கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அதுகுறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணி ராஜன், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com