வேளச்சேரியில் அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி

 தகவல் தொழில்நுட்பத் துறையால் வளர்ச்சி பெற்ற வேளச்சேரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
வேளச்சேரியில் அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி
வேளச்சேரியில் அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி

 தகவல் தொழில்நுட்பத் துறையால் வளர்ச்சி பெற்ற வேளச்சேரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

 வேளச்சேரியின் சிறப்பு அம்சங்கள்: 2008-ஆம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட வேளச்சேரி தொகுதியானது மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தாம்பரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து சில பகுதிகளைப் பிரித்தெடுக்கப்பட்டு, புதியதாக உருவாக்கப்பட்டதாகும்.

 வேளச்சேரி, தரமணி பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலனோர் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்கள்,நடுத்தர குடும்பத்தினர்,வியாபாரிகள் ஆவார்கள். பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதி, திருவான்மியூர் கடற்கரைப் பகுதி ஆகிய இடங்களில் மீனவர்கள் வசிக்கின்றனர். அதேவேளையில் அடையாறு, பெசன்ட் நகர்,கலாஷேத்ரா காலனி,திருவான்மியூர் பகுதிகளில் மேல்தட்டு மக்கள் வசிக்கின்றனர்.
 தகவல் தொழில்நுட்பத் துறையின் அசுர வளர்ச்சியால் கடந்த 20 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்த தொகுதி வேளச்சேரி. ஒரு காலத்தில் நீர்நிலைகளாகவும்,வயல்வெளிப் பகுதிகளாகவும் காணப்பட்ட வேளச்சேரி, இப்போது கண்ணுக்கு எட்டிய தூரம் காங்கீரிட் வீடுகளாகவும், வானளாவிய கட்டடங்களாகவும் காட்சி அளிக்கின்றன.

 இந்தத் தொகுதியில் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோயில், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், அஷ்டலட்சுமி கோயில், திருவான்மியூரில் பாம்பன் சுவாமி கோயில் ஆகிய ஆன்மிகத் தலங்கள் உள்ளன.

 இந்தத் தொகுதியில் தான் தரமணி டைட்டல் பார்க், எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம், தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியன உள்ளன. மேலும், வேளச்சேரி, தரமணி பகுதியில் சுமார் 500 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

 வெள்ளத்தில் மூழ்கும் வேளச்சேரி: 280 ஏக்கர் பரப்பளவுடன் பரந்து விரிந்த இருந்த வேளச்சேரி ஏரி இப்போது 55 ஏக்கருடன் பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டதோடு, இந்த ஏரிக்கு வரும் கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.

 இதனால் மழைக்காலத்தில் வேளச்சேரிக்குள் தேங்கும் மழைநீர், வெளியேற முடியாத நிலை உள்ளது. மேலும், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் வடியும் மழைநீர் வீராங்கால் ஓடை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி செல்லும். ஆனால் இப்போது அந்த கால்வாயும் தூர்ந்துவிட்டது. இதனால் மழைக்காலத்தின்போதும் இந்தப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரும் வேளச்சேரியை சூழ்ந்துவிடுகிறது.

 இதன் காரணமாக நவம்பர்,டிசம்பர் மாதங்களில் வேளச்சேரி தனித்தீவாக மாறும் காட்சி அரங்கேறுகிறது. முக்கியமாக, வேளச்சேரி ராம்நகர், ஏஜிஎஸ் காலனி,அம்பேத்கர் நகர் ஆகியப் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
 இந்த நிலையை மாற்றுவதற்கு வீராங்கால் ஓடை தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்பட வேண்டும், வேளச்சேரிக்குத் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு தேவைப்படும் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும் என்பது வேளச்சேரி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 2016ஆம் ஆண்டு முதல் வேளச்சேரி விஜய்நகரில் ரூ.102 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி இன்னும் முடிவடையாமல் இருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் இந்த பணியை துரிதப்படுத்தி,நிறைவேற்ற வேண்டும் எனவும் வேளச்சேரி வாக்காளர்கள் வலியுறுத்துகின்றனர்.

 வாக்காளர்களும், வேட்பாளர்களும்...:
 இந்தத் தொகுதியில் மொத்தம் 3,13,761 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் ஆண்கள் 1,55,197,பெண்கள் 1,58,473,திருநங்கைகள் 91 ஆவர். அதிமுக சார்பில் எம்.கே.அசோக், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெ.எம்.எச். ஹஸன் மௌலானா, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, அமமுக சார்பில் எம்.சந்திரபோஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் மோ.கீர்த்தனா உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 வெற்றி பெறப் போவது யார் ?
 வேளச்சேரியில் ஏற்கெனவே நடைபெற்ற இரு தேர்தல்களில் தலா ஒரு முறை அதிமுகவும், திமுகவும் வென்றுள்ளன. 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக் 82,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜெயராமன் 50,245 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வாகை சந்திரசேகர் 70,139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி 61,267 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். 2016 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் அதிமுக வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் வேளச்சேரி தொகுதியும் ஒன்றாகும். ஆனால் அதிமுக வேட்பாளரான முனுசாமியின் வெற்றி 8,872 வாக்குகளில் கை நழுவிச் சென்றது.

 இந்த தொகுதியில் வன்னியர்கள், பிராமணர்கள், தலித்துகள், மீனவர்கள் ஆகியோர் கணிசமாக உள்ளனர்.சிலப் பகுதிகளில் முதலியார்கள், முக்குலத்தோர், கிராமணி ஆகிய சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். கிறிஸ்தவர்கள்,முஸ்லிம் மதத்தினரும் உள்ளனர்.

 தொகுதியில் உள்ள பூர்விக மக்களைவிட, தொழில்சார்ந்து,வேலை சார்ந்து குடியேறிய வெளியூர் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த வாக்குகளை ஈர்ப்பதில் அரசியல் கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதன் விளைவாக பெண் வாக்காளர்களையும் குறி வைத்து அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் களத்தில் இருந்தாலும், அதிமுக,காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மட்டுமே வெற்றிக்கான வாய்ப்பு காணப்படுகிறது என்பதே தொகுதி மக்களிடையே நிலவும் பேச்சு.
 -கே. வாசுதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com