தமிழக இளைஞர்கள் தான் ஜல்லிக்கட்டு நாயகர்கள்: மு.க.ஸ்டாலின்

தமிழக இளைஞர்கள் தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகர்கள் என்று புதன்கிழமை, போடியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
போடியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க ஸ்டாலின்.
போடியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க ஸ்டாலின்.

போடி: தமிழக இளைஞர்கள் தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகர்கள் என்று புதன்கிழமை, போடியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், போடியில் போடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதி வேட்பாளர் கே.எஸ்.சரவணக்குமார், ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் ஏ.மகாராஜன், கம்பம் தொகுதி வேட்பாளர் நா.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வாக்குச் சேகரித்து அவர் பேசியது: 

போடிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக வேட்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தேனி மாவட்டத்திற்கு இறைவன் கொடுத்த கொடை என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதன் மூலம் அவர், ஓ.பன்னீர்செல்வத்தை மாவட்டத்தை விட்டு வெளியே வந்து விடாதீர்கள் என்று கோடிட்டு காட்டியுள்ளார்.

அதிமுகவிற்கு துரோம் செய்தவர்கள் தேர்தலில் டெபாசிட் தொகையை இழப்பார்கள் என்றும் முதல்வர் கூறியுள்ளார். பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவிற்கு வாக்களிக்காத துணை முதல்வர் உள்ளிட்ட அக் கட்சி எம்.எல்.ஏ.,களை குறிப்பிட்டுத்தான் அவர் அவ்வாறு பேசியுள்ளார்.

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ஆணை தற்காலிகமானது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நிரந்தரமானது என்று பாமக நிறுவனர் ராமதாசும் கூறுகின்றனர். தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இவர்கள் நாடகமாடுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு நாயகன் என்று தன்னை தானே விளம்பரம் செய்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இப்போது பிரதமர் நரேந்திர மோடியை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார். தமிழக இளைஞர்கள் தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகர்கள். எந்த அரசியல்வாதியும் இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரத்தை தூண்டி சீர்குலைக்க முன்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக, தமிழக இளைஞர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார் மு.க ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com