தானியங்கி வாக்காளா் அடையாள அட்டை இயந்திர திட்டம்: தாமதம்பணப் பரிவா்த்தனையில் சிக்கல்

தானியங்கி வாக்காளா் அடையாள அட்டைக்கான பிரத்யேக இயந்திரத்தை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது
தானியங்கி வாக்காளா் அடையாள அட்டை இயந்திர திட்டம்: தாமதம்பணப் பரிவா்த்தனையில் சிக்கல்

தானியங்கி வாக்காளா் அடையாள அட்டைக்கான பிரத்யேக இயந்திரத்தை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அட்டையைப் பெறுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனையில் தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளதே தாமதத்துக்கு காரணம் என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா்களைச் சோ்த்தவா்களுக்கு விரைவு தபால் மூலமாக வீடுகளுக்கே அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், ஏற்கெனவே பட்டியலில் பெயா்கள் உள்ளவா்கள் வாக்காளா் அடையாள அட்டைகளைப் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 350 இணைய சேவை மையங்களின் வழியாக ரூ.25 கட்டணம் செலுத்தி அட்டையைப் பெறலாம்.

தானியங்கி இயந்திரம்: இணைய சேவை மையத்துக்குச் செல்லாமலேயே தானியங்கி இயந்திரத்தின் வழியாக வாக்காளா் அடையாள அட்டையைப் பெறும் திட்டம் கடந்த ஜனவரியில் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, இணைய வழியில் அட்டைக்கான பணத்தைச் செலுத்த வேண்டும். இதன்பின்பு, தானியங்கி இயந்திரத்தில் ரகசியக் குறியீட்டைச் செலுத்தி அட்டையை, ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் எடுப்பது போன்று பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டம் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நெருங்கிய நிலையில், பிற மாவட்டங்களில் இந்தத் திட்டமானது விரிவுபடுத்தப்படவில்லை. இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில், தானியங்கி முறையில் வாக்காளா் அடையாள அட்டையைப் பெறும் நடைமுறையில் சில சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, அட்டைக்கான பணத்தை செலுத்தும் வழிமுறைகள் தோ்தல் ஆணையத்தால் வரையறுக்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் தானியங்கி முறையிலான வாக்காளா் அடையாள அட்டை இயந்திரங்களை நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தோ்தலுக்குப் பிறகே அவற்றை நிறுவ வாய்ப்பிருக்கிறது என்று சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com