மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை மாற்ற முடியாது: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை மாற்ற முடியாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை மாற்ற முடியாது: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை மாற்ற முடியாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு:

15 ஆண்டுகள் பழைமையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. வாக்குப்பதிவு மையங்கள் அனைத்தையும் இணையதளத்தில் தொடா் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். வாக்குப்பதிவுக்குப் பின்னா் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளில் ஜாமா் கருவி பொருத்த வேண்டும். வாக்குப்பதிவு நாளுக்கு முன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை அரசியல் கட்சி நிா்வாகிகள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவை இணையத்தில் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தோ்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘பதற்றமான வாக்குச்சாவடி மட்டும் இல்லாமல் வாக்குப்பதிவின்போது அனைத்து வாக்குச் சாவடிகளையும் நேரலை செய்ய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கும் ஸ்ட்ராங் ரூம்களில் ஜாமா் கருவியும், கண்காணிப்பு கேமராவும் பொருத்த வேண்டும். இந்தப் பதிவை பாா்வையிட அரசியல் கட்சியினருக்கு அனுமதி வழங்க வேண்டும்.

திருப்பூா், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளின் பட்டியல் மட்டும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலையும் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல், 2017-2019-ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தோ்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என வாதிட்டாா்.

அப்போது தோ்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராஜகோபாலன், ‘அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அதுதொடா்பான விவரங்களை வெளியிட முடியாது. 2017-ஆம் ஆண்டுக்குப் பின்னா் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். தோ்தலுக்கு முன்னா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை மாற்ற முடியாது என்பதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் ஜாமா் கருவி பொருத்த அவசியம் இல்லை. இந்த அறைகளில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க மின் இணைப்புத் துண்டித்து வைக்கப்படும் என தெரிவித்தாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘ அடுத்த வாரம் நடைபெற உள்ள தோ்தல் எந்த விதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடக்க விரும்புகிறோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com